Enable Javscript for better performance
நிரந்தர அமைதிக்கான வழி யோகாசனம்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    
    modi

    உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் ’சர்வதேச யோகா திருவிழா'வையொட்டி, தில்லியில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி.

    பயங்கரவாதச் சவால்களுடன் உலகம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நிரந்தர அமைதிக்கான வழியை யோகாசனம் காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பரமார்த்த நிகேதனில் ’சர்வதேச யோகா திருவிழா' புதன்கிழமை தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தில்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அவர் பேசியதாவது:
    பழங்கால முனிவர்களும், உலகம் முழுவதிலும் இருந்து வந்த ஞானிகளும் அமைதியைத் தேடி ஒன்று திரண்ட இந்த ரிஷிகேஷ், யோகாசனத் திருவிழாவை நடத்துவதற்கு ஒரே சிறந்த தலமாகும்.
    ’’வாழ்வின் மிகச் சிக்கலான கேள்விகளுக்குத் தீர்வுகளை அளிக்கக் கூடிய ஆற்றல் மிக்க ஞானிகள் நிறைந்த இடம் இந்தியா'' என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர் மாக்ஸ் முல்லர் கூறினார். மேலும், உலக மக்கள், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கும், மனிதகுல நன்மைக்காக அவர்கள் பாடுபடுவதற்கும் யோகாசனம் போன்ற பாரம்பரிய பயிற்சி முறைகளை இந்தியா கற்றுக்கொடுக்கிறது என்றும் அவர் கூறினார்.
    ’’யோகாசனம், முதலில் ஒருவரது மனமும், உடலும் ஒருங்கிணைவதற்கு உதவுகிறது; பிறகு அவரது ஆன்மா சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு யோகாசனம் உதவுகிறது'' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.
    யோகாசனம், உடற்பயிற்சிக்கான வடிவம் மட்டும் அல்ல; அது, உடல், மனம், ஆன்மா வழியாக அமைதியை அடைவதற்கான வழியாகும். யோகானம், ஒருவரின் உடலையும், மனதையும் தூய்மையாக்கி, இயற்கைக்கு மிக அருகில் ஒருவரைக் கொண்டு செல்கிறது.
    தொடர்ச்சியாக, நீண்ட காலம் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், தனி மனிதர்கள் ஒன்றிணைவதற்கான பேரறிவை அது கொடுக்கிறது.
    உலகம் இன்று பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அமைதிக்கான வழியைக் காட்டும் யோகாசனம், முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்காலத்துக்கே மிகவும் ஏற்றதாக உள்ளது.
    இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் எல்லை வரை ஆராய்ச்சி செய்வதிலும், ஆன்மாவின் ஆழத்தை ஆராய்ச்சி செய்வதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
    இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த பரமார்த்த நிகேதன் அமைப்பின் தலைவர் சுவாமி சித்தானந்த சரஸ்வதியைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
    விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு: முன்னதாக, சமீபத்தில் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai