சுடச்சுட

    

    பெங்களூரில் உருக்குப் பாலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் அறிவிப்பு

    By DIN  |   Published on : 03rd March 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    George

    பெங்களூரில் உருக்குப் பாலம் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டுள்ளதாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
    கோடையில் குடிநீர்ப் பிரச்னையை சமாளிப்பது தொடர்பாக பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.ஜே.ஜார்ஜ் கூறியது:
    பெங்களூரில் சாளுக்கியா சதுக்கம்- ஹெப்பாள் மேம்பாலம் இடையே உருக்குப்பாலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் சித்தராமையாவுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தத் திட்டத்தைக் கைவிடுகிறோம். இதற்கான அதிகாரப்பூர்வ முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.
    இந்தத் திட்டத்துக்காக காங்கிரஸ் நிர்வாகிகள் ரூ.65 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா குற்றஞ்சாட்டியதில் உண்மையில்லை. இந்த விவகாரத்தை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த பாஜக முனைந்துள்ளது.
    பெங்களூரு மாநகரின் வளர்ச்சியைக் காட்டிலும் அரசியல்தான் பெரிது என பாஜக செயல்படுகிறது. இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததே முதல்வர் சதானந்த கெளடா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றபோதுதான்.
    பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவே உருக்குப்பாலம் திட்டத்தை வகுத்திருந்தோம். பெங்களூரிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க உருக்குப்பாலம் திட்டத்தை எதிர்ப்பவர்கள் யோசனை வழங்கினால், அதைப் பரிசீலித்து முடிவெடுப்போம் என்றார்.
    அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைரதிபசவராஜ், இந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் எம்.எல்.சி. நாராயணசாமியும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai