சுடச்சுட

    

    வர்த்தகர் மொயின் குரேஷி வெளிநாடு செல்ல தவறான தகவலை அளித்தார்: தில்லி நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

    By DIN  |   Published on : 03rd March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    QURESHI

    கருப்புப் பண வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இறைச்சி வர்த்தகர் மொயின் அக்தர் குரேஷி வெளிநாடு செல்வதற்கு தவறான தகவலை அளித்ததாக தில்லி நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
    குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்த இறைச்சி வர்த்தகர் மொயின் அக்தர் குரேஷி மீது ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தெரிவிக்காதது தொடர்பாக வருமான வரித்துறை கருப்புப் பண தடுப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு தில்லி பெருநகர நீதிமன்றம் கடந்த 2015-இல் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மொயின் குரேஷி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
    அதை ஏற்று அவருக்கு நீதிமன்றம் 2015 மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அப்போது "தனது அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது' என்று அவருக்கு நிபந்தனை விதித்தது. எனினும், பின்னர் அந்த நிபந்தனையானது "வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று மாற்றப்பட்டது.
    அதன் பின்னர், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியைச் சந்திக்கச் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு மொயின் குரேஷி கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானார்.
    அப்போது அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். எனினும், வெளிநாடு செல்லும்போது தகவல் தெரிவித்தால் போதுமானது என்ற நீதிமன்ற உத்தரவை காட்டியதைத் தொடர்ந்து மொயின் குரேஷி, லண்டனுக்கு புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
    இது தொடர்பான தகவல்களை வருமான வரித் துறை ஆராய்ந்து வந்தது. அப்போது, கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து வருமான வரித் துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில், "மொயின் குரேஷி வெளிநாடு சென்றபோது அவரது மனைவி இந்தியாவில்தான் இருந்தார்' என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மனைவி லண்டனில் சிகிச்சை பெறுவதாக தவறான தகவலை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது தெரியவந்தது.
    இந்நிலையில், மொயின் குரேஷி மீதான கருப்புப் பணத் தடுப்பு வழக்கு தில்லி பெருநகர நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அஜய் கர்க் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் வழக்குரைஞர் பிரிஜேஷ் கர்க் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
    தன் மனைவி இந்தியாவில் உள்ளதை மறைத்து, அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக மொயின் குரேஷி, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்துள்ளார்.
    எனவே, இனி வெளிநாடு செல்வதற்கு முன் தகவலளித்தால் போதுமானது என்ற ஜாமீன் நிபந்தனையை "வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியம்' என்று மாற்ற வேண்டும் என்று அவர் கோரினார். அப்போது மாஜிஸ்திரேட் கூறுகையில், இந்த விவகாரத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்து, விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai