சுடச்சுட

    

    2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கியது

    By DIN  |   Published on : 03rd March 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டில் தற்போது புழக்கத்திலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, ரூ. 2,000 நோட்டும், பிரத்யேக அம்சங்களைக் கொண்ட புதிய ரூ. 500 நோட்டும் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
    இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கௌட் என்பவர் ரூ. 2,000 நோட்டுகளை அச்சிடும் பணி எப்போது தொடங்கியது? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
    இதற்கு, ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
    2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதேபோல், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது.
    மேலும், பழைய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் நடைமுறை கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 27-ஆம் தேதியுடன் கைவிடப்பட்டது. இதேபோல், பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் நடைமுறை கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 28-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதன்மூலம், உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதிக்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே ரூ. 2,000 நோட்டுகளை அச்சிடும் பணி தொடங்கியது தெரியவந்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai