சுடச்சுட

    

    ஆந்திர மேலவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் 6 இடங்களில் போட்டியின்றி வெற்றி

    By DIN  |   Published on : 04th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநில சட்ட மேலவைத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி 6 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றது.
    ஆந்திர சட்ட மேலவையில் காலியாக இருக்கும் 9 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 6 இடங்களில் தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சத்ருசர்லா விஜய ராம ராஜு (ஸ்ரீகாகுளம்), சிக்கலா ராமசந்திர ராவ் (கிழக்கு கோதாவரி) மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் அங்காரா ராம மோகன், மன்டேனா சத்யநாராயண ராஜு (மேற்கு கோதாவரி), ராஜநாராயணசிம்மலு என்ற துரைபாபு (சித்தூர்), தீபக் ரெட்டி (அனந்தபுரமு) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று வேட்பு மனுக்களை சிலர் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, இந்த 6 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர். இதனால் மேற்கண்ட 6 பேரும் அந்தந்த தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். எஞ்சிய 3 இடங்களுக்கு 17-ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் 20-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
    ஆந்திர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில், மேற்கண்ட 6 இடங்களிலும் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. நெல்லூர், கர்னூல், கடப்பா ஆகிய இடங்களில் மட்டும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    இதனிடையே, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், சட்டப் பேரவை உறுப்பினர்களால் நியமிக்கப்படும் சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்தப் பதவிக்கு வரும் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai