சுடச்சுட

    

    குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை கோரும் வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு

    By DIN  |   Published on : 04th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரும் பொதுநல வழக்கில் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்துள்ளது.
    தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு இருப்பதுபோல அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
    இந்நிலையில், இந்த பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    அப்போது, மனுதாரர் அஸ்வினி குமார் கூறியதாவது:
    நமது நாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஊழல், லஞ்சம், அரசியலை குற்றவாளிகள் ஆக்கிரமித்திருப்பது ஆகியவைதான் மிகப்பெரிய பிரச்னைகளான உள்ளன. அரசு அதிகாரிகள், நீதித்துறையில் பணியாற்றுவோர் ஏதாவது ஒரு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அடுத்தகட்டமாக தங்கள் பணியில் இருந்து ஆயுள் முழுவதற்கும் நீக்கப்படுவார்கள். இதுதான் விதி. ஆனால், பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாக உள்ளனர். நீதிமன்றத்தால் ஒரே குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு விதமாக நடத்தப்படுவதை எப்படி ஏற்க முடியும்? எனவே, அரசியல்வாதியாக இருப்பவர் தண்டிக்கப்பட்டால் அவர் தனது பதவியை இழப்பதுடன், வாழ்நாள் முழுவதும் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். மேலும், அவர் சார்ந்த அரசியல் கட்சியில் மட்டுமின்றி, வேறு எந்த அரசியல் கட்சியிலும் அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் சிலர் சிறையில் இருந்து போட்டியிடுவது, தண்டனைக்குப் பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராவது போன்ற நிலை உள்ளது என்று அஸ்வினி குமார் சுட்டிக்காட்டினார்.
    இதையடுத்து, ’இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தங்களது தரப்புக் கருத்தை இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் இறுதிக் கெடு' என்று நீதிபதிகள் கூறினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai