சுடச்சுட

    

    கேரள முதல்வர் தலைக்கு வெகுமதி: ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து ம.பி. நிர்வாகி நீக்கம்

    By DIN  |   Published on : 04th March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    KUNDAN

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவித்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்திராவத், அந்த அமைப்பில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார்.
    மத்தியப் பிரதேச மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பிரகாஷ் சாஸ்திரி வெளியிட்ட அறிவிப்பில், ’சந்திராவத்தின் கருத்து, ஆர்எஸ்எஸ் குறித்து தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால், ஆர்எஸ்எஸ் அமைப்பில் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசார குழுத் தலைவர் ஜே. நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து சந்திராவத் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    முன்னதாக, குந்தன் சந்திராவத் தாம் முன்பு தெரிவித்த கருத்துக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களால் வருத்தமடைந்திருந்தேன். அதனால் உணர்ச்சி வசப்பட்டு, அவ்வாறு தெரிவித்து விட்டேன். எனது கருத்தை திரும்பப் பெறுகிறேன். அந்தக் கருத்துக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    அதேநேரத்தில், கேரளத்தில் இருந்து சிலர் எனக்குத் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர். சமூக ஊடகத்திலும் என்னை குறி வைக்கப் போவதாக தெரிவித்தனர் என்று சந்திராவத் குறிப்பிட்டுள்ளார்.
    உஜ்ஜைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்திராவத் பேசியபோது, கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்படுவதற்கு பழிவாங்கும் வகையில், அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையைக் கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி வெகுமதியாக தரப்படும் என்று அறிவித்தார். அவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
    இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்தது. வன்முறை மீது தங்களுக்கு நம்பிக்கை கிடையாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்புத் தெரிவித்தது. சந்திராவத்தை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai