Enable Javscript for better performance
சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு மார்ச் 11-இல் பேரதிர்ச்சி: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு மார்ச் 11-இல் பேரதிர்ச்சி: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 04th March 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.

  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், வரும் 11-ஆம் தேதி வெளியான பிறகு, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிகப்பெரிய மின்னதிர்ச்சியை சந்திக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
  உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் அமைந்துள்ள மிர்ஸாபூரில் சரிவர மின்விநியோகம் செய்யப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன.
  இந்நிலையில், மிர்ஸாபூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
  இந்தப் பகுதியில் மின்சாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள மின்கம்பியைத் தொட்டுப் பாருங்கள் என்று அகிலேஷ் யாதவ், எனக்கு சவால் விடுத்தார்.
  ஆனால் அவரது புதிய நண்பரான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மின் கம்பியை தாம் தொட்டதாகக் கூறினார். மேலும், மின்சாரம் இல்லாததால் மின் கம்பியைத் தொடுவது பற்றி கவலையடையத் தேவையில்லை என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆஸாதிடம் ராகுல் கூறினார்.
  மின்சாரம் இல்லாததை ராகுல் காந்தியே ஒப்புக் கொண்டிருக்கும்போது, அதற்குப் பிறகும் நான் மின் கம்பியைத் தொட வேண்டுமா?
  இந்த மாநில மக்கள் அனைவரும் ஒருவித மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மின்சாரத்தால் சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், வரும் 11-ஆம் தேதியன்று அதிர்ச்சிக்குள்ளாகும்.
  ராகுல் காந்தியின், ’கட்டில் சபை' பிரசாரத்தின்போது, அங்கிருந்த கட்டில்கள் அனைத்தும் தங்களுக்கு உரியவை எனக் கருதிய மக்கள், அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதே மக்கள், சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியை உறுதிசெய்வார்கள்.
  இந்த மாநிலத்தில் ஒவ்வொரு வேலையை முடிப்பதற்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்க விரும்பினாலும் அல்லது காவல் நிலையத்தில் புகார் பதியக் கூடாது என்று விரும்பினாலும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓய்வூதியம், குடும்ப அட்டைகள் பெறுவது ஆகியவற்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  மாயாவதி மீது தாக்கு: மாயாவதி தனது சிலைகளை அமைப்பதற்காக, மிர்ஸாபூரில் இருந்து கற்களை எடுத்துச் சென்றார். அதுதொடர்பாக, விசாரணை தொடங்கியவுடன் அந்தக் கற்கள், ராஜஸ்தானில் இருந்து எடுத்து வரப்பட்டதாகக் கூறினார். இந்தப் பகுதியில் உள்ள கற்களைக் கூட அவர் வெறுக்கும்போது, இந்தப் பகுதி மக்கள் மட்டும் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்?
  மிர்ஸாபூரில் இருந்த பித்தளைத் தொழிற்சாலைகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளால் சீரழிந்துவிட்டன. அந்தத் தொழிற்சாலைகள் சரியாக இயங்கியிருந்தாலும், முறையான மின் விநியோகம் இருந்திருந்தாலும், இங்குள்ள இளைஞர்கள், வேலை தேடி மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
  மேலும், தங்களுக்கு ஆதரவானவர்களுக்கும், தங்களது சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதால், இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
  எனவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காகவே சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கொடுங்கோலாட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது.
  அகிலேஷ் மீது தாக்கு: அகிலேஷின் தந்தை முலாயம் சிங் முதல்வராக இருந்தபோது, இப்பகுதியில் புதிதாக 2 பாலங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்தப் பாலங்கள் கட்டப்படவில்லை.
  தந்தையின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு மகன் (அகிலேஷ்), மக்களின் எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றுவார்?
  ஒருவேளை, அந்தப் பாலங்கள், முலாயம் சிங்கின் சொந்த ஊரில் கட்டப்படுமானால், உரிய நேரத்தில் பணிகள் முடிந்திருக்கும். அதேபோல், மாயாவதியின் ’யானை' சிலையாக இருந்திருந்தால் உடனடியாக நிறுவப்பட்டிருக்கும்.
  எனவே, இந்த மாவட்டத்தில் இருந்து சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் சட்டப்பேரவைக்குச் செல்ல முடியாத வகையில், அக்கட்சிகளை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றார் மோடி.
  உத்தரப் பிரதேசத்தில் 6-ஆம் கட்டத் தேர்தல், சனிக்கிழமை (மார்ச் 4) நடைபெறவுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai