சுடச்சுட

    

    தவாங் பகுதியை இந்தியா விட்டுக்கொடுப்பதே எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு: சீனா

    By DIN  |   Published on : 04th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக்கொடுப்பதே இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று சீனாவின் முன்னாள் தூதரக அதிகாரியான டாய் பிங்குவோ தெரிவித்துள்ளார்.
    இந்தியா - சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, அருணாசலப் பிரதேசம் தங்கள் நாட்டுக்கு உள்பட்ட பகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால், இதனை இந்தியா ஏற்க மறுக்கிறது.
    இந்தப் பிரச்னையின் காரணமாக, சில சமயங்களில் அருணாசலப் பிரதேச எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்களை இந்திய ராணுவத்தினர் வெளியேற்றுவதும் தொடர்கதையாகி உள்ளது.
    இந்த எல்லைப் பிரச்னை குறித்து இரு நாடுகளிடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், இதில் சுமுகத் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன ஊடகம் ஒன்றுக்கு அந்நாட்டின் முன்னாள் தூதரக அதிகாரி டாய் பிங்குவோ பேட்டியளித்துள்ளார். (இரு நாடுகளின் எல்லைப் பிரச்னை தொடர்பாக கடந்த 2003 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இந்திய நாட்டின் பிரதிநிதிகளுடன் டாய் பிங்குவோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்)
    அந்தப் பேட்டியில் டாய் பிங்குவோ கூறியிருப்பதாவது:
    பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா - சீனா இடையே "மெக்மோகன் லைன்' என்ற பெயரில் எல்லைக் கோடு வகுக்கப்பட்டது.
    எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் வரையப்பட்ட அந்த எல்லைக் கோட்டில், சீனாவின் ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட தவாங் பிராந்தியம் இந்திய எல்லைக்குச் சென்றுவிட்டது. இதனை பிரிட்டீஷ் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
    எனவே, தவாங் பிராந்தியத்தின் மீதான சீனாவின் தார்மிக உரிமையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். எனவே, தவாங் பிராந்தியை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க இந்தியா முன்வர வேண்டும்.
    அதுவே, இரு நாட்டு எல்லைப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என டாய் பிங்குவோ அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
    இந்தியா மறுப்பு: இதனிடையே, டாய் பிங்குவோரின் இந்தக் கூற்றினை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என இந்திய அதிகாரிகள் தெரித்துள்ளனர். மேலும், தவாங் பிராந்தியம் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், மற்ற நாட்டுக்கு இப்பகுதியை விட்டுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai