சுடச்சுட

  

  நாகா ஒப்பந்தத்தால் அஸ்ஸாம் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 04th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tarungogai

  "நாகா அமைதி ஒப்பந்தத்தால் அஸ்ஸாம் மாநிலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்'' என அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் கேட்டுக் கொண்டார்.
  இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  மாநிலத்திலுள்ள எண்ணெய் வயல்களை தனியார்மயமாக்குவதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
  மாநிலத்தை ஆளும் சர்வானந்த சோனோவால் தலைமையிலான பாஜக அரசு, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் துணிந்து எடுத்துக் கூறுமா? பொதுமக்களின் எண்ணத்துக்கு மாறாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா?
  குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள திருத்தமானது, அஸ்ஸாம் மாநில மக்களின் நலனுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. இந்தத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கதேச அகதிகள் அஸ்ஸாமில் குடியேறிவிடுவர்.
  நாகாலாந்தில் நிலவிவந்த கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரையும் ரகசியம் காக்கப்படுகிறது. இதை, அரசு பகிரங்கப்படுத்தாதது ஏன்? இந்த ஒப்பந்தமானது, நாகாலாந்து வரம்புக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
  மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது முதல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அஸ்ஸாம் முதல்வராக சர்வானந்த சோனோவால் பொறுப்பேற்றபோது தனக்கு குறைந்தபட்ச பாதுகாப்பே போதும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு "இஸட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்?
  பாஜக அரசானது, பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத் தான் செயல்படுகிறது என்றார் தருண் கோகோய்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai