Enable Javscript for better performance
பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் பிர- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

    By DIN  |   Published on : 04th March 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pranap

    தாம்பரம் விமானப்படை தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறப்பு உறையை வெளியிடுகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன் விமானப்படை அதிகாரிகள்.

    இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
    சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் பேசியதாவது:
    நவீன உலகில் மிகப் பெரிய சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்த விரும்புபவர்களை இரும்புக் கரங்கள் கொண்டு நாம் ஒடுக்க வேண்டும்.
    அதே நேரம், இதுபோன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டும் ராணுவத்தினரின் சேவை நின்று விடாமல், இயற்கைப் பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு உதவும் பணியிலும் நமது பாதுகாப்புப் படையினர் ஈடுபட வேண்டும்.
    கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற பதான்கோட் தாக்குதலின்போது, நமது விமானப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் உயிரிழப்புகள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
    அதுபோல, உத்தரகண்ட், காஷ்மீர் மற்றும் தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பின்போதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய விமானப் படையினரின் பணி மிகுந்த பாராட்டுக்குரியதாக அமைந்தது.
    இப்போது நமது பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றிருப்பதும் நமது படை வீரர்கள் வெளிப்படுத்தும் போர்த் திறனையும் பார்க்கும்போது, நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றார் அவர்.
    முன்னதாக, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரணாப் முகர்ஜி, தாம்பரம் விமானப் படையின் இயந்திரவியல் பயிற்சி மையத்துக்கும் (எம்.டி.ஐ.), பதான் கோட் ஹெலிகாப்டர் பிரிவுக்கும் வண்ணக் கொடிகளை வழங்கி கௌரவித்தார்.
    அதன் பின்னர், விமானப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வீரர்கள் துப்பாக்கிகளை லாவகமாகக் கையாண்டு திறமையை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து எம்ஐ.17, எம்ஐ.35 போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டப்பட்டன.
    போர் விமானி சூரிய கிரண் தலைமையிலான குழு ஒரே நேரத்தில் 6 விமானங்களில் வானில் பறந்தபடி, வெவ்வேறு வடிவங்களில் மாறி மாறிப் பறந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai