சுடச்சுட

  

  பினாமி சட்டத்தை மீறுவோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: வருமான வரித் துறை எச்சரிக்கை

  By DIN  |   Published on : 04th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் பினாமி சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
  ஒருவர் தனது சொத்துகள் அல்லது பணம் குறித்து வெளிப்படையாக தெரிவிக்காமல், ஒப்புக்காக மற்றொருவரின் பெயரில் மாற்றி வைப்பதே ’பினாமி' என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற பினாமி சொத்துகள் மூலமாக கருப்புப் பணம் அதிக அளவில் வெள்ளையாக்கப்படுகிறது.
  இதனைத் தடுப்பதற்காக கடந்த 1988-ஆம் ஆண்டில் பினாமி பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், இந்தச் சட்டம் அந்தக் காலகட்டத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  இந்நிலையில், இந்தச் சட்டத்தை மேலும் வலிமையாக்கும் வகையில், பல்வேறு திருத்தங்களுடன் கூடிய பினாமி சொத்து பரிவர்த்தனைச் சட்டம் கடந்த ஆண்டு (2016) இயற்றப்பட்டது.
  இந்தச் சூழலில், இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளிதழ்களில் வெள்ளிக்கிழமை விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்தச் சட்டத்தில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
  அதன் விவரங்கள் வருமாறு: பினாமிகள் (மற்றொருவரின் சொத்துகள் அல்லது பணத்தை தனது பெயரில் வைத்திருப்போர்), பயனாளிகள் (சொத்துகளின் உரிமையாளர்கள்) மற்றும் பினாமி பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவுபவர்கள் ஆகிய அனைவரும் இச்சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றவாளிகளாக கருதப்படுவர். அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பினாமி சொத்து மதிப்பின் தற்போதைய சந்தை விலையில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.
  அதேபோல், பினாமி சொத்துகள் அல்லது பணப் பரிவர்த்தனைகள் குறித்து தவறான தகவல் அளிப்பவர்கள் மீதும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட பினாமி சொத்து மதிப்பில் 10 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்படும் என அந்த விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ் இப்போது வரை 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai