சுடச்சுட

  

  ரஃபேல் போர் விமானங்கள் 2019-இல் விமானப் படையில் சேர்க்கப்படும்: விமானப் படைத் தளபதி தகவல்

  By DIN  |   Published on : 04th March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரஃபேல் போர் விமானங்கள் வருகிற 2019-ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
  பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா அளித்த பதில்:
  பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட உள்ள ’ரஃபேல்' போர் விமானங்கள், வரும் 2019-இல் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். மிக்-21 ரக போர் விமானத்துக்கான உதிரி பாகங்களைத் தருவதை ரஷ்யா நிறுத்திவிட்டபோதும், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. விமானத்தின் என்ஜின் தவிர மற்ற உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. என்ஜின் போன்ற ஒருசில பாகங்களையும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டும்: தாம்பரம் விமானப்படைத் தளத்தை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. போதுமான இடவசதி இல்லாததே அதற்குக் காரணம். 2004 சுனாமியின் போதும், அண்மையில் நிகழ்ந்த சென்னை வெள்ளத்தின்போதும் மிகப் பெரிய பங்களிப்பை தாம்பரம் விமானப்படைத் தளம் செய்துள்ளது.
  சென்னை பெரு வெள்ளத்தின்போது சென்னை விமான நிலையம் முடங்கிப்போனது. அப்போது தாம்பரம் விமானப் படை ஓடுதளத்தையே அனைத்து விமானங்களும் பயன்படுத்தின. அந்த அளவுக்கு இதைப் பராமரித்து வருகிறோம். இப்போது, இந்த விமான ஓடுதளத்தை உயர்த்தவும், விரிவாக்கம் செய்யவேண்டிய கட்டாயமும் உள்ளது. இதற்கு தமிழக அரசு தேவையான நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும். அதற்கான நிலத்தை தமிழக அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
  கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தின் பாகங்களோ அல்லது ஆதாரமோ மீட்கப்படாததால், விபத்துக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மோசமான வானிலை காரணமாகவே விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக முடிவு செய்தோம். ஆழ்கடலில் இருந்து சிக்னல் பெறுவது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாததால், விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்றார் அவர்.
  36 போர் விமானங்கள்: பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ. 37 ஆயிரம் கோடி செலவில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai