சுடச்சுட

  

  "இந்தியாவும், சீனாவும் பரஸ்பர உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

  By DIN  |   Published on : 05th March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவும் சீனாவும் பரஸ்பர உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சீன நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் தெரிவித்துள்ளார்.
  சீன நாடாளுமன்றத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை (மார்ச் 6) தொடங்குகிறது.
  அதையொட்டி, தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை ஃபூ யிங் சனிக்கிழமை சந்தித்தார்.
  அப்போது, அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கும், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பதற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டு வருவது, சீனா - பாகிஸ்தான் வர்த்தக வழித்தடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம் பெற்றுள்ளது போன்ற விவகாரங்களில் இந்தியாவின் கவலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
  அதற்குப் பதிலளித்து ஃபூ யிங் கூறியதாவது:
  இந்தியாவும், சீனாவும் மிக நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி சந்தித்து, பயங்கரவாதத் தடுப்பு, சர்வதேசக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மண்டல அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விவகாரங்களில் இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன.
  இந்தச் சூழலில், சில கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
  இரு நாடுகளுக்கும் இடையில் இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாக பிரச்னைகள் இருந்து வருகின்றன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
  இதுபோன்ற பிரச்னைகளை அணுகும்போது இந்தியாவும், சீனாவும் பரஸ்பர உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்றார் ஃபூ யிங்.
  என்எஸ்ஜி, மசூத் அஸாத் விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாடு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் சீனா உரிமை கொண்டாடி வரும் அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா செல்லவிருப்பதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai