சுடச்சுட

    

    கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் இரு பக்தர்கள் சாவு; 5 பேர் காயம்

    By DIN  |   Published on : 05th March 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    caraccident

    திருப்பதி அருகே கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சேதமடைந்த கார்.

    திருப்பதி அருகே தமிழக பக்தர்கள் சென்ற கார், கிணற்றினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    இதுகுறித்து திருப்பதி எம்.ஆர். பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:
    திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் 6 பேர் காரில் வியாழக்கிழமை காலை ஏழுமலையானைத் தரிசிக்க திருமலை வந்தனர். தரிசனம் முடிந்த பின்னர் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் இரண்டு மணி நேரம் கார் ஓட்டுரைக் காணவில்லை. அதனால் ஓட்டுநர் மது அருந்தி விட்டு வந்தாரா அல்லது காரில் ஏதாவது பிரச்னையா என்பது தெரியவில்லை.
    அதன்பின் அவர்கள் ஊருக்குப் புறப்பட்டனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருப்பதி அருகே சி.மல்லவரம் மண்டலத்தில் உள்ள பெருமாள்பள்ளி என்ற இடத்தில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகில் உள்ள பெரிய விவசாயக் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    இதனைக் கண்ட அந்தக் கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் காரைக் கிணற்றிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
    இந்த விபத்தில் காரில் இருந்த சுகன்யா (21) மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    மேலும் காரில் வந்த சண்முகம் (57), சசிகலா (45), விஜய்(35), சிவா (25), சரசு (19) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். ஓட்டுநரின் பெயர், விவரம் தெரியவில்லை.
    காயமடைந்தவர்கள் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    இந்த விபத்து குறித்து திருப்பதி எம்.ஆர். பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai