சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் மாளிகையில் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள்

  By DIN  |   Published on : 05th March 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  invention4

  சாலைப் போக்குவரத்தை கட்டுப்படுத்த தான் தயாரித்த கண்டுபிடிப்புடன் திண்டுக்கல் மாணவன் எஸ். சேது பிரசாத்.

  குடியரசுத் தலைவர் மாளிகையில் புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
  தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளையின் (என்ஐஎஃப்) ஒத்துழைப்புடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.
  மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், மேனகா காந்தி ஆகியோரும் பார்வையிட்டனர்.

  ஏரியில் கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் கண்டுபிடிப்புடன் நீலகிரி அரசுப் பள்ளி மாணவர் எம். அருண்.


  விவசாயம், அறிவியல் தொடர்புடைய பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஆகாயத் தாமரை இலைகளையும், அதன் வேரில் ஒட்டியுள்ள மண்ணையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் இயந்திரத்தை நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவர் அருண் காட்சிப்படுத்தியிருந்தார்.
  அதேபோன்று, ஒரே செல்லிடப்பேசியில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தி ஏ.சி, டி.வி., மின்விளக்கு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் சாதன மாதிரியை சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி டி.வித்யா அமைத்திருந்தார்.
  திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் எஸ். சேதுபிரசாத், ஒரு வழிப் பாதையில் விதி மீறிச் செல்லும் வாகனங்களைக் தடுக்கும் வகையிலான வேகத்தடை அமைப்பு, வாகனங்கள் சாலையில் இயக்கப்படும் போது மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஆகியவற்றை காட்சிப்படுத்தி அது தொடர்பான விளக்கத்தையும் அளித்தார்.

  ஷூவினால் மின்சாரம் தயாரிக்கும் முறையை விளக்கும் மதுரை மாணவர் டி.எஸ். பில்கேட்ஸ், வீடுகளில் மின் சாதனங்களை கட்டுப்படுத்தும் கருவிகளுடன் சென்னை அண்ணா நகர் மாணவி டி. திவ்யா.


  சாலைகளில் குப்பைகளை தூசி பறக்காமல் அகற்றும் வகையில் திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.வடிவழகன் வடிமைத்துள்ள கை மூலம் தள்ளும் வாகனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், காலணிகள், ஷூ ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மதுரை கேரன் பப்ளிக் ஸ்கூலை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் டி.எஸ். பில்கேட்ஸ் அமைத்திருந்த கருவிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தன.
  திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆர்.சந்தோஷ், ஜெ.ராஜசேகர், ஏ.நிவாஷினி, ஆர். ரத்னா ஆகியோர் தங்களது பள்ளிக் காலத்தின் போது வடிவமைத்த, பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்கும் சென்ஸார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய பல்வேறு துறைகள் தொடர்புடைய அறிவியல் சாதனங்கள் பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்தன.

  மண்ணில் உள்ள குப்பைகளை அகற்றும் கருவிகளுடன் திருவாரூர் பஞ்சாயத்துப் பள்ளி மாணவர் எஸ். வடிவழகன்.


  மார்ச் 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை, முகல் கார்டனை பார்வையிடுவதற்கு வரும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவரின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் ஷமிமா சித்திக் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai