சுடச்சுட

  

  சாகுபடியில் புதிய ரகங்களை உருவாக்கிய புதுச்சேரி விவசாயிக்கு தேசிய விருது

  By DIN  |   Published on : 05th March 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranab

  தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி விவசாயி டி.வெங்கடபதி ரெட்டியாருக்கு தேசிய விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

  கனகாம்பரம், சவுக்கு மரம் சாகுபடியில் புதிய ரகங்களையும், நவீன தொழில்நுட்ப உத்திகளையும் உருவாக்கிய புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி டி.வெங்கடபதி ரெட்டியாருக்கு தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
  தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், "9-வது புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுக்கான தேசிய விருது-2017' வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளையின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பேருக்கு தேசிய விருதுகளும், பலருக்கு மாநில விருதுகளும் வழங்கப்பட்டன.
  இதில், கனகாம்பரம், சவுக்கு மரம் ரகங்களில் புதிய தொழில்நுட்பத்தையும், ரகங்களையும் உருவாக்கியதற்காக புதுச்சேரி விவசாயி டி.வெங்கடபதி ரெட்டியாருக்கு தேசிய விருது (முதல்) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்.
  விருது பெற்ற விவசாயி டி.வெங்கடபதி ரெட்டியார் தனது விவசாய அனுபவம், மலர்ச் சாகுபடியின் புதிய ரகங்கள் உருவாக்கம் ஆகியவை குறித்து "தினமணி' நிருபரிடம் கூறியதாவது:
  புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமம்தான் எனது சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இளமைப் பருவத்தில் விளையாட்டு வீரராக இருந்தேன். ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை நடத்த பொருளாதார வசதி இல்லை. மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டேன். எச்சில் இலை சோற்றை உண்ணும் நிலைகூட ஏற்பட்டது.
  இந்நிலையில், பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநராக இருந்த சம்பந்த மூர்த்தியை நேரில் சந்தித்து உதவி கேட்டேன். அவர் எனக்கு சில கனகாம்பரம் செடிகளைக் கொடுத்து, "பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் கூடவே வருவது மலர் ஒன்றுதான்; இந்தக் கனகாம்பரம் மலர் சாகுபடியில் ஈடுபடு. அது உன்னைக் கைவிடாது' என்று கூறினார். அந்தச் செடிகளை வைத்து ஒரு சென்ட் நிலத்தில் நானும் எனது மனைவி விஜயாளும் சாகுபடியைத் தொடங்கினோம். சிறிது பலன் கிடைத்தது.
  இந்நிலையில், புதுவையில் மலர்க் கண்காட்சியில் கனகாம்பரம் செடி ரூ.500-க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. நானோ ரூ.5-க்கு செடியைத் தருவதாக விவசாயத் துறை இயக்குநரிடம் கூறினேன். இதையடுத்து, உடனடியாக 1 லட்சம் கனகாம்பரம் செடிகளை வழங்குமாறு என்னிடம் வேளாண் துறையினர் ஆர்டர் கொடுத்தனர். பனியறை முறையில் நடவு செய்து ஒரு லட்சம் கனகாம்பரம் செடியை உருவாக்கினேன். மறு ஆண்டில் நடைபெற்ற மலர்க் கண்கட்சியில் 1 லட்சம் செடிகளை விவசாயத் துறையிடம் வழங்கினேன். ரூ.2.50- மானியத்தில் அந்தச் செடிகளை அத்துறையினர் விற்பனை செய்தனர். இதனால், ஒரு மணிநேரத்தில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. உடனடியாக எனக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு மனைவி உள்பட எல்லோரும் என்னைப் பாராட்டினர்.
  இந்நிலையில், 1996-ல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது என்னையும், எனது மகள் லட்சுமியையும் பாராட்டி ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பின் காரணமாக, "காமா கதிர்வீச்சு' முறை மூலம் கனகாம்பரம், சவுக்கு மரம் ஆகியவற்றில் புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதற்கு சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தினர் தேவையான உதவிகளைச் செய்தனர். இதேபோன்று, ரசாயன முறை, அயல் மகரந்தச் சேர்க்கை முறை ஆகியவற்றின் மூலம் கனகாம்பரத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட புதிய ரகங்களை உருவாக்கினேன்.
  இதைத் தொடர்ந்து, மத்திய அரசு விவசாயத் துறை பிரிவில் நாட்டிலேயே முதல் முறையாக எனக்கு 2012-இல் பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க பல்கலை., தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலை. ஆகியவை டாக்டர் பட்டங்கள் வழங்கி கௌரவித்தன. தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மூலம் தேசிய விருதைப் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
  சவுக்கு மரத்தில் ஐந்து ஆண்டுக்கு 200 டன் மகசூல் தரும் வகையில் புதிய உத்திகளைக் கண்டுபிடித்துளேன். அதேபோன்று, ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி உற்பத்தி செய்யும் ரகத்தையும் உருவாக்கியுள்ளேன். இச்செடி ஐந்து ஆண்டுகள் நிலைத்து நின்று பலன் தரும்.
  எனது நோக்கமெல்லாம் இந்தியாவில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞரிடம் நான் கண்டுபிடித்த விவசாய நுணுக்கங்களையும், ரகங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதும், அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதும்தான். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் நான் கண்டறிந்த பயிர் ரகங்களையும், அதன் சாகுபடி முறைகளையும் இலவசமாக கற்றுத் தர விரும்புகிறேன். என் உயிர் இருக்கும் வரையும் இதுதான் லட்சியம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai