சுடச்சுட

    

    சிவசேனைக்கு மும்பை மேயர் பதவி: போட்டியிலிருந்து விலகியது பாஜக

    By DIN  |   Published on : 05th March 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர மாநிலம், பிருஹன் மும்பை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகியதையடுத்து, அந்தப் பதவியை சிவசேனை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
    பிருஹன் மும்பை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனை 84 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் சிவசேனைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் சிவசேனையின் பலம் 88-ஆக உயர்ந்தது. இதற்கடுத்து பாஜக 82 இடங்கள் பெற்றது. அக்கட்சிக்கு அஹில பாரதிய சேனையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆதரவு தெரிவித்தார். இதனால் பாஜகவின் பலம் 83-ஆக அதிகரித்துள்ளது.
    எனினும், பிருஹன் மும்பை மாநகராட்சியை நிர்வகிப்பதற்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனையை ஆதரிக்கும் திட்டமில்லை என்று காங்கிரஸ் (31), தேசியவாத காங்கிரஸ் (9) கட்சிகள் அறிவித்துவிட்டன.
    இந்நிலையில், மும்பையில் சிவசேனை மூத்த தலைவர் அனில் பரப் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர், மேயர் பதவிக்கு விஸ்வநாத் மாதேஸ்வரும், துணை மேயர் பதவிக்கு ஹரேஷ்வர் வோர்லிகரும் சிவசேனை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
    பாஜக போட்டியில்லை- பட்னவீஸ்: இதனிடையே, பிருஹன் மும்பை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு வேட்பாளர்களை பாஜக நிறுத்தாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மகாராஷ்டிரத்தில் எனது தலைமையிலான அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எனது அரசை காப்பதற்காக பாஜக சரணடைந்து விட்டதாக கருதக்கூடாது' என்றார். பிருஹன் மும்பை மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டியிலிருந்து பாஜக விலகியதையடுத்து, அந்தப் பதவிகளை சிவசேனை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai