சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: இடைத்தரகரின் கூட்டாளிகளுக்கு ஜாமீன்
By DIN | Published on : 05th March 2017 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிக்கேல் ஜேம்ஸின் கூட்டாளிகள் 2 பேருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய நபர்கள் பயணம் செய்வதற்கு அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கும், இந்திய விமானப்படைக்கும் இடையே ரூ.3,600 கோடி மதிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்தோருக்கு ரூ.360 கோடி அளவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐயைப் போன்று, மத்திய அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. தில்லியில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறை 1,300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், இந்தியாவிடம் இருந்து ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெற்றுத்தர கிறிஸ்டியன் மிக்கேல் ஜேம்ஸýக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.225 கோடி லஞ்சமாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜேம்ஸýக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை தில்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது. அவரது தொழில்முறை கூட்டாளிகளான இந்தியாவைச் சேர்ந்த ஆர்.கே. நந்தா, ஜே.பி. சுப்பிரமணியம் ஆகியோருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தது.
இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்.கே. நந்தாவும், ஜே.பி. சுப்பிரமணியமும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனு, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர்கள் 2 பேருக்கும் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.கே. நந்தா, ஜே.பி. சுப்பிரமணியத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி அரவிந்த் குமார் ஏற்றுக் கொண்டார். மேலும், அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் சொந்தப் பிணையில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது; சாட்சிகள் அல்லது ஆவணத்தை அழிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது ஆகிய நிபந்தனைகளையும் நீதிபதி விதித்தார்.