சுடச்சுட

    

    ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு: தமிழக அரசு உறுதி

    By DIN  |   Published on : 05th March 2017 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Jayakumar

    சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்துக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மாநில நிதியமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
    தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
    மாநிலங்களின் உரிமைகள், நிதி சுயாட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற தமிழ்நாடு எப்போதும் முன் நிற்கும். ஜிஎஸ்டி வரிச் சட்டத்தை இடர்பாடின்றி அமல்படுத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ஆம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்ததை நினைவுகூர்கிறேன்.
    மாநில நிதி சுயாட்சியின் மேல் ஏற்படும் தாக்கம்; உற்பத்தி, ஏற்றுமதி அதிகம் கொண்ட மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியால் வருவாய் இழப்பு; ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தனியாக இயங்கும் ஓர் அமைப்பை ஏற்படுத்துதல்; மதுபானம், பெட்ரோலிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தல்; இருமுகக் கட்டுப்பாட்டைத் தவிர்த்தல்; வரி விலக்கு, வரிக்கு குறைந்தபட்ச வரம்பு நிர்ணயித்தல்; வருவாய் நடுநிலை விகிதங்கள் ஆகிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் தமிழகம் எழுப்பியதன் விளைவாக அரசியல் சாசன திருத்த மசோதாவில் முக்கிய சரத்துகள் சேர்க்கப்பட்டது மிகையானது என சொல்ல முடியாது. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அதை செம்மைப்படுத்த தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது.
    இதுபோன்ற தருணத்தில் இந்தக் கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையான, மத்திய மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் விட்டுக் கொடுத்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழகம் எழுப்பிய பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
    மத்திய ஜிஎஸ்டி வரிச் சட்டத்தின் பிரிவு 6, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 4 ஆகிய இரண்டும் மத்திய, மாநில அரசு அலுவலர்களின் அதிகாரப் பகிர்வு குறித்ததாகும். கவுன்சிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் விகிதாசார அடிப்படையில் வணிகர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் ஆகியோரை பிரித்து மூன்று சட்டங்களின் கீழ் அவர்களுக்கு சமமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக ஏற்கெனவே மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின், மத்திய விற்பனைச் சட்டம் 1956-இன் 9(2) பிரிவில் வரி விதிப்பு, மறு வரி விதிப்பு, வசூல், வரி செலுத்துதல், வட்டி மற்றும் அபராதத் தொகை வசூல் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு மாநில அரசு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனியாக தெரிவித்துள்ள கருத்துரையின் அடிப்படையில், இவ்விரண்டு பிரிவுகளையும் திருத்தியமைக்குமாறும், சட்டத்திலேயே அவற்றைச் சேர்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்கு தமிழகம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
    இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னோடியாக தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் (வாட்) கீழ் பதிவு பெற்ற 6.01 லட்சம் வணிகர்களை புதிய ஜிஎஸ்டி வரி தளத்தில் மாற்றுவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், 5.19 லட்சம் வணிகர்கள் (86 சதவீதம்) புதிய வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
    ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த தேவையான தகவல் தொழில் நுட்பத்திற்கான வன்பொருள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருப்பதுடன், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய சரக்கு, சேவை வரிச் சட்டம், ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரிச் சட்டம், வருவாய் இழப்பை ஈடுசெய்யும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டவுடன் மாநில சரக்கு, சேவை வரிச் மசோதாவை தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் அமைச்சர் டி. ஜெயக்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai