Enable Javscript for better performance
தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள்: பிரதமர் நரேந்திர மோடி- Dinamani

சுடச்சுட

  

  தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள்: பிரதமர் நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 05th March 2017 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi-poll-canvas

  ""தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள்'' என்று உத்தரப் பிரதேச வாக்காளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
  உத்தரப் பிரதேச பேரவைக்கான 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல், எஞ்சியுள்ள 40 தொகுதிகளில், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் திறந்த வேனில் சென்று சனிக்கிழமை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
  வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அதன் நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தலைவருமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு மோடி பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர், காசி விசுவநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று மோடி வழிபட்டார். பின்னர், அங்கிருந்து ஜான்பூருக்குச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மோடி பேசியதாவது:
  ராணுவ வீரர்கள் பலரை நாட்டுக்கு வழங்கிய "தியாக பூமி'யான ஜான்பூரை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.
  நம் நாட்டில் ஏதாவது நல்ல காரியங்களைத் தொடங்கும்போது, காயத்ரி மந்திரத்தை நாம் உச்சரிப்போம். ஆனால், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியோ காயத்ரி பிரஜாபதி மந்திரத்தை உச்சரிக்கிறது. (பாலியல் புகாரில் சிக்கியுள்ள சமாஜவாதி அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை மோடி மறைமுகமாகக் குறிப்பிட்டார்).
  மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எப்படியிருக்கிறது உங்களுக்கே (வாக்காளர்கள்) தெரியும். ஜான்பூரில் மாலை இருட்டிய பிறகு தாய்மார்களும், சகோதரிகளும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிகிறதா?
  அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தபோது, அமேதி தொகுதியில் அந்த அமைச்சரை ஆதரித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் காயத்ரி பிரஜாபதியும் கலந்து கொண்டார். ஆனால், அந்த அமைச்சர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
  மாநிலத்தில் எருமைகள் (அமைச்சர் ஆஸம்கானின் எருமைகள்) மாயமானபோது, அவற்றைக் கண்டுபிடிக்க காவல் துறை விரைந்தோடியது. ஆனால், நியாயம் கேட்டு ஒரு பெண் கதறும்போது மாநில அரசும், காவல் துறையும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற அரசு தண்டிக்கப்பட வேண்டும்.
  இந்த மாநிலத்தில் குற்றச் செயல்களை செய்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான வாய்ப்பு, வாக்காளர்களாகிய உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி, வரும் 8-ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்டத் தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து, தவறு செய்தவர்களை செய்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
  தகவல்கள் நீக்கம்: "திட்டங்கள்தான் பேசும்' என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுவார். திட்டங்களா? தவறுகளா? எது மக்களிடம் பேசுகின்றன என்பதை அகிலேஷ் தெரிவிக்க வேண்டும்.
  தேவ்ரியா, மகராஜ்கஞ்ச் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில், ""உத்தரப் பிரதேச அரசின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் முடிக்கப்பட்டுள்ளனவா? என்று கேள்வி எழுப்பினேன். அதனால், விரக்தியடைந்த சமாஜவாதி அரசு, இணையதளப் பக்கத்தில் இருந்த தகவல்களை உடனடியாக நீக்கிவிட்டது.
  உத்தரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு மின்சாரம் வழங்க முன்வந்தபோது, அதை பெற மறுத்துவிட்டார் அகிலேஷ் யாதவ். சைஃபையிலும் (அகிலேஷின் சொந்த ஊர்), தங்களுக்கு விருப்பமான இடங்களில் மட்டுமே மின்சாரம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
  உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் போனஸ் வாக்குகளுடன் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்றார் பிரதமர் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai