சுடச்சுட

  

  பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அதிகம் வளரும் இடம் செல்லிடப்பேசி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  By DIN  |   Published on : 06th March 2017 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mobile

  பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அதிகம் வளரும் இடங்களில் செல்லிடப்பேசியும் ஒன்றாகிவிட்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  மேற்கத்திய பாணி கழிவறையில் உள்ள இருக்கையைவிட மனிதர்களின் கைகளில் உள்ள செல்லிடப்பேசிகள்தான் அதிக அழுக்கானதாகவும், நுண்ணுயிரிகள் பெருகும் இடமாகவும் உள்ளது என்று பல்வேறு வெளிநாடுகளில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.
  இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள மத்திய அரசின் தேசிய நுண்ணுயிர் அறிவியல் மைய விஞ்ஞானிகள் செல்லிடப்பேசிகளில் வளரும் நுண்ணுயிரிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
  பாக்டீரியா, பூஞ்சைகள்: இதற்காக மொத்தம் 27 செல்லிடப்பேசிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 515 வகையான பாக்டீரியாக்களும், 28 வகையான பூஞ்சைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை பெரும்பாலும் செல்லிடப்பேசிகளின் ஸ்கிரீனில் தான் இருந்தன.
  மேலும், புதிதாக 3 நுண்ணுயிரி இனங்கள் செல்லிடப்பேசியில் இருந்து கண்டறியப்பட்டன. இதில் இரு நுண்ணுயிரிகள் பாக்டீரியா வகையைச் சேர்ந்தவை. ஒரு நுண்ணுயிரி பூஞ்சை வகையைச் சேர்ந்ததாகும். இந்த மூன்று நுண்ணுயிரிகளும் இப்போதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  உடலுக்கு தீங்கு விளைவிக்காது: எனினும், இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. நோய் ஏற்படுத்தும் கிருமிகள் எதுவும் செல்லிடப்பேசிகளில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள்தான் செல்லிடப்பேசிகளிலும் வளருகின்றன.
  இதற்கு முன்பு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் செல்லிடப்பேசிகளில் வளரும் நுண்ணுயிரிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், 10 முதல் 12 வகையான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் செல்லிடப்பேசிகளில் வளருவது தெரியவந்தது. கழிவறையில் கூட 3 வகை பாக்டீரியாக்கள்தான் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
  நுண்ணுயிரிகள் பெருகக் காரணம்:செல்லிடப்பேசிகள் என்பது சமையல் அறை முதல் ரயில், பஸ் பயணம் என அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, அவற்றில் அதிக அளவு நுண்ணுயிரிகள் வளருகின்றன. மேலும், வியர்வை படிந்த கைகள், கன்னத்தில் வைத்து செல்லிடப்பேசியை பயன்படுத்துவது, பஸ், ரயில்களில் உள்ள கைப்பிடிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு இடங்களில் தொட்ட கைகளைக் கொண்டு செல்லிடப்பேசியை பயன்படுத்துவதால் அவற்றில் எளிதில் நுண்ணுயிரிகள் பரவிவிடுகின்றன.
  மருந்துகளை மீறும் பாக்டீரியாக்கள்: மனித உடலுக்கு ஊறுவிளைவிக்கும் 12 நுண்ணுயிரி குடும்பங்களைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் இப்போதுள்ள தடுப்பு மருந்துகளையும் மீறி வளரக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளதை உலக சுகாதார ஆய்வு அமைப்பினர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, இவற்றைக் கொல்வதற்கு புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
  செல்லிடப்பேசியின் சுத்தம்: சில எளிமையான வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் செல்லிடப்பேசியை நுண்ணுயிரிகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க முடியும். முதலாவதாக எக்காரணம் கொண்டும் செல்லிடப்பேசிகளை கழிவறைக்குள் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடாது.
  துணியில் சோப்பு நீரை சிறிதளவு நனைத்து செல்லிடப்பேசியை சுத்தம் செய்யலாம். அதன் பிறகு நன்றாக காய்ந்த துணியால் துடைத்துவிட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும். செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை சுத்தம் செய்வதற்காகவே தயாரிக்கப்பட்ட பொருள்களும் கிடைக்கின்றன, அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். செல்லிடப்பேசியை சுத்தம் செய்தவற்கு முன்பு அதனை "சுவிட்ச் ஆப்' செய்வது அவசியம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai