சுடச்சுட

  
  vote

  மணிப்பூர் சட்டப் பேரவை முதல்கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றதையொட்டி, தலைநகர் இம்பாலில் வாக்குச்சாவடி ஒன்றில் அடையாள அட்டைகளுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

  மணிப்பூர் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 84 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல, உத்தரப் பிரதேசத்தில் 6-ஆவது கட்டமாக 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின.
  காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், மலைபாங்கான சுராசந்த்பூர், காங்போக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய 38 தொகுதிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
  சுமார் 19 லட்சம் வாக்காளர்களுக்காக 1,643 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
  காலை முதலே வாக்குச் சாவடிகளில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
  இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி.கே.தேவாங்கன் கூறுகையில், "முதல்கட்ட தேர்தலில், சுமார் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், மேற்கண்ட 38 தொகுதிகளில் சுமார் 77 சதவீத வாக்குகள் பதிவாகின' என்றார்.
  28 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனடியாக கிடைக்கப் பெறாததால், வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
  முக்கிய வேட்பாளர்கள்: முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், பேரவைத் தலைவர் லோகேஸ்வர் சிங், அமைச்சர்கள் ஹேமசந்திர சிங், கோவிந்தாஸ், ரத்தன்குமார் சிங், பாஜக தலைவர் சௌபா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
  கல்வீச்சு சம்பவம்: இதனிடையே, சினாம் லிகாய் என்ற பகுதியில், "மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி'யின் (பிஆர்ஜேஏ) அமைப்பாளர் எரென்ட்ரோ லிசோம்பன் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிஆர்ஜேஏ-வின் நிறுவனர் இரோம் சர்மிளா, குராய் சட்டப் பேரவைத் தொகுதியில் தனது வாக்கைச் செலுத்தினார். மணிப்பூரில் மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

  உ.பி.யில் 57% வாக்குப் பதிவு

  உத்தரப் பிரதேசத்தில் 6-ஆவது கட்டமாக 49 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின.
  ஆஸம்கார், மௌ, கோரக்பூர், மகாராஜ்கஞ்ச், குஷிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய 49 தொகுதிகளில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், 63 பெண்கள் உள்பட 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "6-ஆவது கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இந்த தொகுதிகளில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மக்களவைத் தொகுதியான ஆஸம்கார், இத்தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஆஸம்காரில், ஓர் இடத்தில் கூட முலாயம் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதேபோல, தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி போட்டியிடும் மௌ தொகுதியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai