சுடச்சுட

    

    மத்திய, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களுக்கு கவுன்சில் ஒப்புதல்

    By DIN  |   Published on : 05th March 2017 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    GST

    மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்பு (ஐஜிஎஸ்டி) சட்டம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
    தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் முன்பு நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தின் துணைச் சட்டங்களான மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றின் வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டக்கூடிய சிறிய ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட், தாபாக்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி (மத்திய, மாநில அரசுகள் தலா 2.5 சதவீத வரி விதிப்பு) விதிப்பதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி பேசியபோது இந்தத் தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
    தில்லியில் கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதையடுத்து சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி சட்டங்களுக்கு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 12-ஆவது கூட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மாநில ஜிஎஸ்டி சட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
    அதனைத் தொடர்ந்து, இழப்பீட்டு சட்டம், மத்திய ஜிஎஸ்டி சட்டம், யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்டம், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். பிறகு, மார்ச் 9-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது பாதி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
    மாநில ஜிஎஸ்டி சட்டத்தை பொருத்தவரையில், மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்தப் பணி முடிவடைந்ததும், 4 வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களில் எந்தெந்த பொருட்கள், சேவைகளை சேர்ப்பது என்று தரம்பிரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவர். சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டத்தை செயல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க இழப்பீட்டு சட்டம் வழிவகை செய்கிறது. ஆடம்பரப் பொருட்கள் மற்றும் போதைப் பொருள் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் செஸ் வரியின்மூலம் கிடைக்கும் வருமானம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்தப்படும். அதிகபட்சமாக செஸ் வரி எவ்வளவு விதிப்பது? என்பது குறித்து இழப்பீட்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.
    நாடு முழுவதும் தற்போது பல்வேறு வரி விதிப்பு முறைகள் அமலில் உள்ளன. இதற்குப் பதிலாக வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனும் ஒரே சீரான சட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவெப்பதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலை மத்திய அரசு அமைத்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai