சுடச்சுட

    

    மனைவியின் பெயரில் கணவர் வாங்கிய சொத்துகள் மனைவிக்கே சொந்தம்: தில்லி நீதிமன்றம்

    By DIN  |   Published on : 05th March 2017 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""மனைவியின் பெயரில் கணவரால் வாங்கப்பட்ட சொத்துகள், கணவரின் மரணத்துக்குப் பிறகு, மனைவிக்கே சொந்தம்; மகளோ அல்லது மருமகனோ அதை உரிமை கொண்டாட முடியாது'' என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    தில்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த லஜவந்தி தேவி (65), தில்லி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அதில் அவர், "எனது கணவர் கடந்த 1966-ஆம் ஆண்டு எனது பெயரில் வீடு வாங்கினார். அந்த வீட்டிலுள்ள ஒரு பகுதியை எனது மகள், மருமகனுக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக வழங்கினேன். இந்நிலையில், அந்த பகுதியில் இருந்து அவர்கள் 2 பேரும் வெளியேற மறுக்கின்றனர். ஆதலால் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
    இதை லஜவந்தி தேவியின் மகளும், மருமகனும் மறுத்தனர். அவர்கள் தாக்கல் செய்த பதிலில், "அந்த வீட்டை லஜவந்தி தேவியின் கணவரே வாங்கினார். அதன் உரிமையாளர் லஜவந்தி தேவி கிடையாது. ஆதலால் அதை அவர் உரிமை கொண்டாட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த வழக்கு மீது தில்லி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி காமினி லா தீர்ப்பளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
    லஜவந்தி தேவியின் கணவர், தனது மரணத்துக்குப் பிறகு, மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டுதான், வீட்டை அவரது பெயரில் வாங்கியுள்ளார். ஆதலால், அந்த வீட்டுக்கு லஜவந்தி தேவிதான் உரிமையாளர் ஆவார். அவரது மகள், மருமகன் வீட்டின் ஒரு பகுதியில் மட்டுமே உள்ளனர். அவர்கள், வீட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.
    ஹிந்து மதத்தைச் சேர்ந்த விதவையான லஜவந்தி தேவி, தனது பெயரில் தனது கணவரால் வாங்கப்பட்ட சொத்தை எப்படி வேண்டுமானாலும் அவர் விரும்பியது போல் பயன்படுத்தலாம் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி காமினி லா குறிப்பிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai