சுடச்சுட

  

  ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்: நாகபுரியில் இளைஞர் கைது

  By DIN  |   Published on : 05th March 2017 11:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  இதுகுறித்து மும்பை கணினி குற்றப்பிரிவு இணை ஆணையர் அகிலேஷ் சிங் கூறியதாவது: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி மர்ம நபர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய வேண்டும், இல்லையெனில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
  அந்த மின்னஞ்சலை ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிக்கு உர்ஜித் படேல் அனுப்பி, மேல்நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதையடுத்து அந்த அதிகாரி மும்பை கணினி குற்றப்பிரிவு காவல்பிரிவை அணுகி புகார் அளித்தார்.
  இதன்பேரில் கணினி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, நாகபுரியில் உள்ள இணைய மையத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகபுரி விரைந்த அதிகாரிகள், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர்.
  அவரின் பெயர் வைபவ் பத்தல்வார் ஆகும். விசாரணையில் உர்ஜித் படேலுக்கு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதை பத்தல்வார் ஒத்துக் கொண்டார். 37 வயதாகும் வைபவ் பத்தல்வார் வெளிநாட்டில் உயர்பட்டப் படிப்பை முடித்துள்ளார். ஆனால், தற்போது வேலையில்லாமல் இருந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே, மின்னஞ்சலை அனுப்பியதாக தெரிகிறது.
  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அகிலேஷ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளரின் கருத்தை அறிய செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai