Enable Javscript for better performance
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன: திருட்டு குறித்த செய்திக்கு யுஐடிஏஐ மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன: திருட்டு குறித்த செய்திக்கு யுஐடிஏஐ மறுப்பு

    By DIN  |   Published on : 06th March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aadhar

    ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
    ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான செய்தியையும் யுஐடிஏஐ மறுத்துள்ளது.
    நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டையை வழங்கும் பணியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், தனிநபர் ஒவ்வொருவரின் கைவிரல் ரேகை, கரு விழி உள்ளிட்டவைகளை ஆதாரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    இந்நிலையில், ஆதாரில் உள்ள தனிநபர் குறித்த தகவல்கள் திருடப்பட்டு தவறான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதாக செய்தித்தாளில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி குறித்து ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் தெரிவித்திருப்பதாவது:
    ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை எங்கள் ஆணையம் கவனமாக ஆய்வு செய்தது. ஆனால் செய்தித் தாளில் வெளியான செய்திகளின்படி, ஆதார் தகவல்கள் திருட்டு சம்பவமோ, அதன்மூலம் நிதி இழப்போ நடக்கவில்லை. ஆதார் தகவல் சேமிப்பு தொகுப்பில் எந்த வகையிலும் ஊடுருவல் நடைபெறவில்லை. தனிநபர் குறித்து ஆதாரில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் எங்கள் ஆணையத்திடம் இருக்கிறது.
    பயோமெட்ரிக்ஸ் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்யும் திறன் ஆதார் அமைப்பிடம் உள்ளது. தகவல் திருட்டை கண்டுபிடித்து அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் திறனும் ஆதார் அமைப்பிடம் இருக்கிறது.
    நல்ல நிர்வாகம், மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு ஆதார் மிகவும் முக்கிய கருவியாகும். ஆதாரை பயன்படுத்தி நாடு முழுவதும் 4.47 கோடி பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். சமையல் எரிவாயு இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தையும் ஆதார் மூலம் நேரடியாக அரசு வழங்கி வருகிறது. இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.49 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
    ஆதார் தகவல்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அதில் இடம்பெற்றிருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செய்தித் தாளில் வெளியான செய்தி, தனிநபர் தொடர்புடையது. அதாவது நிதிநிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்த முயன்றார். இதை எங்கள் ஆணையத்தின் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்து விட்டது. இதையடுத்து அவர் மீது ஆதார் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai