சுடச்சுட

  

  உ.பி. அமைச்சர் பதவியில் நீடிப்பது ஏன்? அகிலேஷுக்கு ஆளுநர் கேள்வி

  By DIN  |   Published on : 06th March 2017 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramnai

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகவுள்ள அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்னமும் பதவியில் நீடிப்பது ஏன்? என்று அந்த மாநில ஆளுநர் ராம் நாயக் கேள்வியெழுப்பியுள்ளார்.
  49 வயதாகும் காயத்ரி பிரஜாபதி, முதல்வர் அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
  சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங்கின் ஆதரவாளரான இவர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
  இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட 7 பேர் மீது சிறார் பாலியல் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  அதையடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதியன்று பேரவைத் தேர்தலில் வாக்களித்த பிரஜாபதி, அதன் பின்னர் தலைமறைவானார். அவரை மாநில போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
  இந்நிலையில், அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முடியாதபடி, அவருடைய கடவுச்சீட்டை மாநில போலீஸார் சனிக்கிழமை முடக்கினர். மேலும், அவரைத் தேடப்படும் நபராகவும் அறிவித்து போலீஸார் நோட்டீஸ் வெளியிட்டனர். இதுதவிர, காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
  இந்தச் சூழலில், காயத்ரி பிரஜாபதி, அமைச்சர் பதவியில் இன்னமும் நீடிப்பது ஏன்? என்று முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநகர் ராம் நாயக் கேள்வியெழுப்பியுள்ளார்.
  இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அகிலேஷ் யாதவுக்கு அவர், ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
  பாலியல் புகாருக்குள்ளான காயத்ரி பிரஜாபதி, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடும் என்பதால், அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரை சரணடையுமாறு அகிலேஷ் யாதவ் கேட்ட பிறகும், அவர் ஒத்துழைக்காமல் தலைமறைவாக உள்ளார்.
  காயத்ரி பிரஜாபதி மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், அமைச்சர் பதவியில் அவர் நீடிப்பது அரசியல் சாசனத்தின் மாண்புக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானதாக உள்ளது. எனவே, அவர் பதவியில் நீடிப்பதற்கான காரணத்தை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஆளுநர் ராம் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
  பாஜக வலியுறுத்தல்: இதனிடையே, காயத்ரி பிரஜாபதியை முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் கேசவ மெளரியா வலியுறுத்தியுள்ளார்.

  கூட்டாளி இடைநீக்கம்

  இந்நிலையில், பிரஜாபதியின் நெருங்கிய கூட்டாளியும், அமைச்சருடன் பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு நபருமான லேக்பால் அசோக் திவாரியை அமேதி மாவட்ட நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. சுரங்கத் துறை அமைச்சராக பிரஜாபதி இருந்தபோது, அவரது உத்தரவின்பேரில் சுரங்கத் துறையின் பணிகளை அசோக் திவாரி மேற்கொண்டு வந்தார்.


  விரைவில் கண்டுபிடிப்போம்- காவல் துறை

  இதனிடையே, தலைமறைவாக இருக்கும் பிரஜாபதியைக் கண்டுபிடிப்பதற்தாக, லக்னெü, கான்பூர், அமேதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அவரைக் கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும், விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புவதாகவும் மாநில காவல் துறை டிஜிபி ஜாவேத் அகமது கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai