சுடச்சுட

    
    aeisha

    பெங்களூரு: பெங்களூரில் சிறுமியை நரபலி கொடுத்தது தொடர்பாக பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி பகுதியில் வசித்து வருபவர் முகமது நூருல்லா. இவரது மகள் ஆயிஷா (10). இவள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 1-ம் தேதி இரவு வீட்டு முன்பு நின்று விளையாடி கொண்டிருந்த சிறுமி ஆயிஷா திடீரென்று மாயமாகி விட்டாள். தனது மகளை முகமது நூருல்லா அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் கடந்த 3-ம் தேதி மாகடி அருகே ஒசஹள்ளி பகுதியில் சாக்கு மூட்டையில் ஆயிஷாவின் உடலை திணித்து மர்மநபர்கள் வீசி இருந்தார்கள். ஆயிஷாவின் கழுத்தை நெரித்து மர்மநபர்கள் கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை வீசியது தெரியவந்தது.

    அவளது உடல் அருகே மாந்திரீக பொருட்கள் கிடந்ததால், ஆயிஷா நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மாகடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்நிலையில், மாணவி ஆயிஷா கொலை வழக்கு தொடர்பாக முகமது நூருல்லாவின் வீட்டின் அருகே வசிக்கும் முகமது வாசில் (42), பெங்களூரு கோரி பாளையாவை சேர்ந்த ரசித் உன்னிஷா (38), நசீம் தாஜ்(33) மற்றும் 17 வயது வாலிபர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் முகமது வாசில் முகமது நூருல்லாவுக்கு உறவினர் ஆவார்.

    முகமது வாசிலின் சகோதரர் முகமது ரபீக் பக்கவாதத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் குணம் அடைய வேண்டும் என்றால், ஒரு சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும் என்று முகமது வாசிலிடம் நசீம் தாஜ் கூறியுள்ளார். இதனால் நரபலி கொடுக்க சிறுமியை தேடும் பணியில் முகமது வாசில் ஈடுபட்டார். அப்போது கடந்த 1-ம் தேதி தனது வீட்டு முன்பு ஆயிஷா விளையாடுவதை அவர் பார்த்துள்ளார். பின்னர் ஆயிஷாவை தனது செல்போனில் படம் பிடித்து, அதனை நசீம் தாஜிக்கும் முகமது வாசில் அனுப்பி வைத்துள்ளார்.

    அதன்பிறகு, கடந்த 1-ம் தேதி இரவில் ஆயிஷாவை முகமது வாசில், கைதான 17 வயது வாலிபர் சேர்ந்து ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவில் ஆயிஷாவின் உடலை ஒசஹள்ளிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமி ஆயிஷாவை நரபலி கொடுத்துள்ளனர். பின்னர், ஆயிஷாவின் உடலை வைத்து மாந்திரீக பொருட்களால் பூஜை செய்தனர். இந்த பூஜையில் கைதான 4 பேரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பூஜை முடிந்ததும் ஆயிஷாவின் உடலை சாக்கு மூட்டைக்குள் திணித்து, அங்கேயே வீசி விட்டு சென்றிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    முன்னதாக ஆயிஷாவை காணவில்லை என்றவுடன் முகமது நூருல்லாவுடன் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார் முகமது ரபீக் என்பது வேடிக்கையும் வேதனையும் நிறைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai