சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ஜேட்லிக்கு முன்னரே தெரியுமா?

    By DIN  |   Published on : 06th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், அதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஆலோசிக்கப்பட்டதா' என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
    அதுகுறித்துப் பதிலளிப்பதிலிருந்து ஆர்டிஐ சட்டம் விலக்கு அளித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
    புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
    கருப்புப் பணத்தை மீட்பதற்காகவும், கள்ள நோட்டுப் புழக்கம், பயங்கரவாத நிதி ஆகியவற்றைத் தடுப்பதற்காகவும் அந்த ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அவர் அப்போது கூறினார்.
    இந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டதா என்ற ஆர்டிஐ விசாரணைக்குப் பதிலளிக்க பிரதமர் அலுவலகமும், மத்திய ரிசர்வ் வங்கியும் மறுத்துவிட்டன.
    இந்த விவரம், ஆர்டிஐ சட்டம் கூறும் "தகவல்' என்ற வரையறைக்குள் வரவில்லை என்று பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் கூறின.
    அதாவது, அரசு அமைப்புகளால் எந்த வகையிலாவது ஆவணப்படுத்தப்பட்ட விவரங்களே "தகவல்' என்று ஆர்டிஐ சட்டம் வரையறுத்துள்ளது. அந்த வகையில், இந்த விசாரணை தொடர்பான எந்த ஆவணப் பதிவுகளும் தங்களிடம் இல்லை என பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் கூறியிருந்தன.
    இந்தச் சூழலில், ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து அருண் ஜேட்லியிடம் முன்னரே ஆலோசனை பெறப்பட்டதா என்று ஆர்டிஐ சட்டத்தின்கீழ் "பிடிஐ' செய்தி நிறுவனம் விசாரணை மனு தாக்கல் செய்திருந்தது.
    இதற்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில், ஆர்டிஐ சட்டப் பிரிவு 8(1)(ஏ)-இன் கீழ், குறிப்பிட்ட இந்த விசாரணைக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
    இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார நலன்கள், பிற நாடுகளுடனான நல்லுறவு ஆகிவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய "தகவல்களை' வெளியிடத் தேவையில்லை என்று ஆர்டிஐ சட்டப் பிரிவு 8(1)(ஏ) விலக்கு அளிக்கிறது.
    இந்தப் பிரிவைச் சுட்டிக்காட்டியுள்ளதன் மூலம், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் அரசிடம் இருப்பதை நிதியமைச்சகம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai