சுடச்சுட

    

    வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி

    By DIN  |   Published on : 06th March 2017 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sbi

    வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து தில்லியில் பாரத ஸ்டேட் வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    பாரத ஸ்டேட் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன், கடந்த 2012-ஆம் ஆண்டு குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாத கணக்குகள் மீது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் அவரிடம் கட்டணம் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.
    இதையடுத்து, வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது.
    ரொக்க டெபாசிட்டுகளுக்கு கட்டுப்பாடு: சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மாதத்துக்கு 3 முறை வங்கிகளில் கட்டணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மேற்கொள்ளும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் தலா ரூ.50-ம், சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும். நடப்பு கணக்காக இருக்கும்பட்சத்தில், அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
    மாத சராசரி இருப்புத் தொகையை (எம்ஏபி) வாடிக்கையாளர் பராமரிக்கவில்லையெனில், சேவை கட்டணத்துடன் சேர்த்து ரூ.100 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். பெருநகரங்களில், மாத சராசரி இருப்புத் தொகையான ரூ.5 ஆயிரத்தில் 75 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், சேவைக் கட்டணமும், ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 50 சதவீதத்துக்கும் குறைவாகவோ அல்லது மாத சராசரி இருப்புத் தொகையை காட்டிலும் குறைவாகவோ இருந்தால், ரூ.50-ம், சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம், அந்தந்த பகுதியைப் பொறுத்து மாறுபடும். கிராமப்புறங்களை பொருத்த வரையில், கட்டணம் குறைவாக இருக்கும்.
    ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணம்: ஏடிஎம் இயந்திர பயன்பாட்டை பொருத்தமட்டில், பிற வங்கி ஏடிஎம் இயந்திரங்களை மாதத்துக்கு 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் தலா ரூ.20 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
    ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால் கட்டணம் இல்லை: அதேநேரத்தில் வாடிக்கையாளர் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு இருந்தால், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கட்டணம் வசூலிக்கப்படாது. கணக்கில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பு இருந்தால், பிற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை கட்டணமின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
    வங்கியில் ரூ.25 ஆயிரம் வரையில் இருப்பு வைத்துள்ள பற்று அட்டை (டெபிட் கார்டு) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம், அவர்களது செல்லிடப்பேசிகளுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பும் சேவைக்கு காலாண்டுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். ஆயிரம் வரையிலும் மேற்கொள்ளப்படும் யுபிஐ, யுஎஸ்எஸ்டி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அந்த பாரத ஸ்டேட் வங்கி மூத்த அதிகாரி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai