ஆன்மிகமே இந்தியாவின் பலம்: மோடி
By DIN | Published on : 07th March 2017 11:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய யோகதா சத்ஸங்க மடத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தில்லி விஞ்ஞான பவனில் செவ்வாய்க்கிழமை சிறப்பு தபால்தலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
ஆன்மிகமே இந்தியாவின் பலம் எனவும், அதற்கு எந்தவொரு மதத்துடனும் தொடர்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பரமஹம்ச யோகானந்தரால் நிறுவப்பட்ட இந்திய யோகதா சத்ஸங்க மடத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பலத்தை சிலர் மக்கள்தொகையைக் கொண்டோ, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டோ நிர்ணயிக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவின் பலமே ஆன்மிகம்தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சிலர் ஆன்மிகத்தை மதத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். உண்மையில், ஆன்மிகம் வேறு, மதம் வேறு ஆகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், இந்தியாவின் ஆன்மிக பலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் யோகிகளும், துறவிகளும் ஆன்மிகத்தை வளர்ச்சியடையச் செய்தார்கள். அவர்களில் ஒருவரான பரமஹம்ச யோகானந்தர், ஆன்மிகத்தைப் பரப்ப இந்தியாவைவிட்டுச் சென்றாலும் அவர் இந்தியாவுடன் எப்பொதும் ஒரு பிணைப்பைக் கொண்டிருந்தார்.
ஆன்மிகம் என்பதில் யோகாசனம் என்பது இறுதி நிலை அல்ல. யோகாசனம்தான் ஆன்மிகத்தின் நுழைவு வாயில் ஆகும். ஒருவர் ஒருமுறை யோகாசனத்தில் ஆர்வம் காட்டி அந்தப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், அவர் வாழ்வின் ஒரு அங்கமாகவே யோகாசனம் ஆகிவிடும் என்றார் மோடி.