Enable Javscript for better performance
உ.பி.க்கு துன்பமிழைத்தவர்களைத் தோற்கடியுங்கள்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  உ.பி.க்கு துன்பமிழைத்தவர்களைத் தோற்கடியுங்கள்: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 07th March 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரோஹனியா பகுதியில் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சி நிர்வாகிகள்.

  உத்தரப் பிரதேசத்தின் துன்பத்துக்குக் காரணமான சமாஜவாதி-காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைத் தோற்கடிக்குமாறு அந்த மாநில வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.
  நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை (மார்ச் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாராணசி நகரில் கடந்த மூன்று தினங்களாக பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், வாராணசியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள குஷிபூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்.
  காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனது இளம் வயதில் நானே ஏழ்மையை அனுபவித்துள்ளேன். எனவே ஏழைகளின் நலனை மேம்படுத்த விரும்புகிறேன்.
  நாடு தனது 75-ஆவது சுதந்திர தினத்தை வரும் 2022-இல் கொண்டாடும். அதற்குள் நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகளை வழங்குவது என்பதை எனது அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமானது விவசாயிகளின் நலனையும் அவர்களது வாங்கும் திறன் மேம்படுவதையுமே பெரிதும் சார்ந்துள்ளது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோரின் வருமானம் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் நாட்டில் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
  பாஜக ஆளும் மாநிலங்களில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 50 முதல் 60 சதவீத விவசாயிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 14 சதவீத விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர்.
  உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி அரசானது போட்டித் தேர்வுகளில் வேண்டியவர்களுக்கு சலுகைளை அளிப்பதிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறது .
  அரசில் கீழ்நிலை அளவிலான ஆள்தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தும் முறையை ஒழிப்பது என்ற முடிவை நான் எடுத்தேன். முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலான நடவடிக்கை இது.
  இதை தனது மாநிலத்தில் அமல்படுத்த அகிலேஷ் தயாராக இல்லை. ஏனெனில் அவர் அதிகார துஷ்பிரயோகம் ஓங்கி வளரவே விரும்புகிறார். உத்தரப் பிரதேச மக்கள் மாயாவதி, அகிலேஷ் ஆகிய இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் பாஜகவால்தான் சட்டம்-ஒழுங்கு நிலைமையை மீண்டும் நிலைபெறச் செய்ய முடியும். இங்கு தற்போது குடும்பத்தின் ஆண் உறுப்பினர் ஒருவரின் துணையின்றி பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர்.
  ஹோலி பண்டிகை வரும் 13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் 11-ஆம் தேதியே (உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்) ஹோலி கொண்டாடும் வகையில் வாராணசி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.
  லால்பகதூர் சாஸ்திரியின் ஆசிரமத்துக்கு வருகை: வாராணசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட மோடி தனது சுற்றுப்பயணத்துக்கு இடையே, அங்குள்ள கர்வா காட் ஆசிரமத்துக்குச் சென்றார். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பூர்வீக இல்லமான அங்கு சாஸ்திரியின் உருவச் சிலைக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார். ஆசிரமத்தில் வழிபாடு நடத்திய மோடி அங்குள்ள கோசாலையில் பசுக்களுக்கு உணவளித்தார்.
  இந்த ஆசிரமத்தின் தலைவராக பாரம்பரியமாக யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களே பதவி வகிப்பது வழக்கம். இந்த ஆசிரமத்தைப் பின்பற்றுவோர் வாராணசி பகுதியில் ஏராளமான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai