Enable Javscript for better performance
உ.பி.யை கொலை, கொள்ளையில் முதலிடத்துக்கு உயர்த்தியவர் அகிலேஷ்: அமித் ஷா தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி.யை கொலை, கொள்ளையில் முதலிடத்துக்கு உயர்த்தியவர் அகிலேஷ்: அமித் ஷா தாக்கு

    By DIN  |   Published on : 07th March 2017 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amith_sha

    உத்தரப் பிரதேச மாநிலத்தை கொலைகளிலும், கொள்ளையிலும் முதலிடத்துக்கு உயர்த்தியவர் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெறுகிறது. சோன்பாத்ரா பகுதியில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அமித் ஷா பேசியதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இங்குள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும். இப்போது மாநிலத்தில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் பாலும், நெய்யும் பெருக்கெடுத்து ஓடும்.
    இப்போது ஆட்சியில் உள்ள அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில்தான் மாநிலத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்துள்ளார். அவருக்கு இந்தத் தேர்தலில் உரிய கைமாறை நீங்கள் செய்தாக வேண்டும்.
    ராகுல் காந்தி, அகிலேஷ் என இரு இளவரசர்கள் மாநிலத்தைச் சுற்றி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தாயாருக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறார். மற்றொருவர் தந்தைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். இருவருமே உத்தரப் பிரதேசத்துக்கு பெரும் சுமையாக உள்ளார்கள்.
    உத்தரப் பிரதேசத்தில் கடந்த பல ஆண்டுகளாக சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வளர்ச்சியை முடக்கிவிட்டன. மாநிலத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், கட்சியையும் வளர்த்துக் கொண்டனர். இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் நாங்கள் உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அமித் ஷா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai