Enable Javscript for better performance
உ.பி., மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது- Dinamani

சுடச்சுட

    

    உ.பி., மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

    By DIN  |   Published on : 07th March 2017 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமையுடன் ஓய்ந்தது.
    உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட (7-ஆவதுகட்ட) தேர்தல் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதேபோல மணிப்பூரிலும், இறுதிக்கட்ட (இரண்டாவது) வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்துடன் அங்கு 7 கட்டத் தேர்தலும் முடிவுக்கு வருகிறது. கடந்த இரு மாதங்களாக அங்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இவை அனைத்தும் திங்கள்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தன.
    பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியை உள்ளடக்கிய 5 பேரவைத் தொகுதிகளுக்கும், நக்ஸல் அச்சுறுத்தல் உள்ள 3 மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால் இறுதிக் கட்டத் தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மோடி தனது தொகுதியில் 3 நாள்கள் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அவரைத் தவிர காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அகிலேஷின் மனைவியும், சமாஜவாதி கட்சி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் இத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
    இத்தேர்தலில் ராகுல் காந்தி, அகிலேஷ் ஆகியோரது பிரசாரம் பெரும்பாலும் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் தாக்குவதாகவே அமைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி, அமித் ஷா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
    மத்திய அரசையும், உத்தரப் பிரதேச அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார்.
    மணிப்பூரில்...: இப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது, இறுதிக் கட்டமாக 22 தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் முடிந்தது.
    இரண்டாவது கட்டத் தேர்தலில் மொத்தம் 98 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், துணை முதல்வர் கைகாங்காம், மனித உரிமை ஆர்வலராக இருந்து அரசியலுக்கு வந்த இரோம் ஷர்மிளா ஆகியோரின் அரசியல் எதிர்காலம் இறுதிக் கட்டத் தேர்தலில்தான் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
    முன்னதாக கடந்த 4-ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 84 சதவீத வாக்குகள் பதிவாயின. மணிப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. எனினும் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
    மணிப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai