சுடச்சுட

    

    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் விருப்ப ஓய்வு விதிகளில் முக்கியத் திருத்தங்கள்: மத்திய அரசு வெளியீடு

    By DIN  |   Published on : 07th March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் விருப்ப ஓய்வு தொடர்பான கோரிக்கை மனு மீது குறிப்பிட்ட காலத்துக்குள் மேலதிகாரிகள் முடிவு எடுக்கும் வகையில், அதுதொடர்பான விதிகளில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
    இதுதொடர்பாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கோரி அளிக்கும் கோரிக்கையை, அதுதொடர்பான மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ’நோட்டீஸ் பீரியட்' தேதிக்குப் பிறகும் நிலுவையில் வைக்கக்கூடாது. இந்தத் தேதிக்கு முன்னதாக, விருப்ப ஓய்வு பெறுவது தொடர்பான அறிவிப்பை சம்பந்தப்பட்ட துறை மேலதிகாரி வெளியிடவில்லையெனில், மனு அளித்த அதிகாரி அந்தத் தேதியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவராகி விடுவார்.
    கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருக்கும் கடைசி தேதிக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட மேல் அதிகாரி அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், மத்திய அரசு அதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடலாம்.
    விருப்ப ஓய்வு கோரி மனு அளிப்போர் அதை வாபஸ் பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும் என்ற விதி இருந்தது. அதிலும் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மனுவில் குறிப்பிட்டிருக்கும் கடைசி தேதிக்கு முன்பாக, உயர் அதிகாரியிடம் சென்று அந்த மனுவை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்த புதிய விதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்ஓஎஸ் அதிகாரிகளுக்குப் பொருந்தும்.
    ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விதிகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 60 வயது வரையில் பணிபுரியலாம். அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறவும் விதி அனுமதிக்கிறது. ஆனால் அவ்வாறு விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்றால், பணியில் சேர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், மாநில அரசுக்கும் 3 மாத நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும்.
    இதனிடையே, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் தாங்கள் விருப்ப ஓய்வுகோரி அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்காமல் மூத்த அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில், விருப்ப ஓய்வு தொடர்பான விதிகளில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai