சுடச்சுட

  

  கேரளப் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுப்பு: பினராயி விஜயன்

  By DIN  |   Published on : 07th March 2017 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranaivijayan

  கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் இந்தச் செயல்பாடு கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  கேரள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அந்த மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த மாதம் 20 அல்லது 21-ஆம் தேதியில் இந்தச் சந்திப்பு நடைபெற அனுமதி தர வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தியிருந்தது.
  இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம், "குறிப்பிட்ட தேதிகளில் பிரதமருக்கு சில பயணத் திட்டங்களும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளும் உள்ளன; அதனால் அவரைச் சந்திக்க இயலாது; மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சரை கேரளப் பிரதிநிதிகள் சந்திக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  இந்நிலையில், இதுதொடர்பாக கேரள சட்டப் பேரவையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
  குறிப்பிட்ட தேதிகளில் பிரதமருக்கு அலுவல்கள் அதிகம் இருந்திருந்தால் மற்றொரு தேதியை ஒதுக்கித் தந்திருக்கலாம். அதை விடுத்து, மத்திய அமைச்சர்களை சந்திக்குமாறு கூறுவது ஏற்புடையதல்ல.
  பிரதமர் அலுவலகம் அளித்த பதில், மோடியின் அறிவுரைப்படியே வழங்கப்பட்டிருக்கும். அதை வைத்துப் பார்த்தால், பிரதமரின் இந்தச் செயல்பாடு கண்டிக்கத்தக்க ஒன்று. கூட்டாட்சிக் கொள்கை மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே இதைக் கருதமுடியும் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, "அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்த பிரதமரின் செயல், ஒட்டுமொத்த கேரள மக்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானது' என்றார்.
  இதன் பிறகு, பாஜக உறுப்பினர் ஓ.ராஜகோபால் பேசியதாவது:
  இந்த விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். பிரதமருக்கு வேலைப்பளுவும், கடமைகளும் அதிகம் இருக்கும். அப்படி இருக்கும்போது, அவருக்கு செளகரியமான தேதியில்தான் சந்திப்பை நடத்த முடியும். அதை விடுத்து மாநில அரசு விரும்பும் தேதிகளில் அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்பதற்காக, பிரதமர் அலுவலகத்தின் பதிலை தவறாக சித்திரிக்கக் கூடாது என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai