Enable Javscript for better performance
சட்டவிரோத கருக்கலைப்பு: மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோத கருக்கலைப்பு: மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கைது

    By DIN  |   Published on : 07th March 2017 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் சட்ட விரோதக் கருக்கலைப்புகளில் ஈடுபட்ட ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    மகாராஷ்டிர மாநிலம், சாங்க்லி நகர் அருகே உள்ள மைசால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபாசாகேப் கித்ராபுரே. ஹோமியோபதி மருத்துவரான இவர், அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
    இந்நிலையில், கருக்கலைப்பு செய்வதற்காக இந்த மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட 26 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் பெற்றோர் சாங்க்லி காவல் நிலையத்தில் மருத்துவர் கித்ராபுரே மீது புகார் அளித்தனர்.
    இதன்பேரில் அந்த மருத்துவமனையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மருத்துவமனையின் பின்புறம் உள்ள கழிவுநீர்க் கால்வாய் அருகே 19-க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சிசுக்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இதையடுத்து, தலைமறைவான டாக்டர் கித்ராபுரேவை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் கித்ராபுரே பதுங்கியிருப்பதாக கர்நாடக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதனைத் தொடர்ந்து, பெல்காமில் போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மருத்துவர் கித்ராபுரேவை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் மகாராஷ்டிர போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    இதுகுறித்து சாங்க்லி மாவட்ட எஸ்.பி. தத்தாத்ரேய ஷிண்டே கூறியதாவது: கித்ராபுரே மீது சட்டவிரோத கருக்கலைப்பு, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவரால் கருக்கலைப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சிசுக்களின் பாலினத்தை கண்டறிவதற்காக அவற்றின் டிஏன்ஏ மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
    சட்டப்பேரவையில் எதிரொலி: இதனிடையே, சட்டவிரோத கருக்கலைப்புச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டேவும் பதவி விலகக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai