சுடச்சுட

    

    சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தை ஐ.நா. உடனடியாக அமல்படுத்த வேண்டும்: மனோகர் பாரிக்கர் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 07th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ManoharParrikarG

    பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தை ஐ.நா. உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தியுள்ளார்.
    உலக அளவில் பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம், பயிற்சி, புகலிடம் உள்ளிட்ட ஆதரவளிப்பது ஆகியவற்றை சட்டவிரோதமாக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஐ.நா.வின் பரிசீலனையில் உள்ளது.
    பயங்கரவாதம் குறித்த வரையறையில், உறுப்பு நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாட்டால், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், தில்லியில் பயங்கரவாதத் தடுப்பு குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:
    தற்போது உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம்தான்.
    பயங்கரவாதச் செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது, அவர்களது சித்தாந்தங்களைப் பரப்புவது, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது உள்ளிட்ட செயல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    எனவே, அதற்கு வகை செய்யும் சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தை ஐ.நா. விரைந்து அமல்படுத்த வேண்டும்.
    மறைமுகப் போரால் இந்தியா பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 7 சதவீதம் இந்தியாவில் நிகழ்த்தப்படுகிறது.
    எனவே, சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை நாடுகடத்த வகை செய்யும் சர்வதேச சட்டம் இயற்றப்படும்வரை இந்தியா தொடர்ந்து அதற்காகக் குரல் கொடுக்கும்.
    பயங்கரவாதம் என்பது சர்வதேச அளவில் வியாபித்திருப்பதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும் உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த நிலை இல்லாமல் உள்ளது.
    பயங்கரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பிராந்திய நாடுகளிடையே ஒருமித்த கருத்து நிலவினால்தான் அதில் வெற்றி காண முடியும்.
    இந்தப் பிராந்தியத்தைப் பொருத்தவரை, பயங்கரவாதத்தின் துணையுடன் நடத்தப்படும் ’மறைமுகப்' போரினால் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
    ’பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும்'
    இந்தக் கருத்தரங்கில் பேசிய ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனீஃப் அத்மர், ’’எங்கள் பகுதியில் பயங்கரவாத்தை ஒழிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அங்கு இன்னும் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
    சில நாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதைக் கைவிட்டால்தான் இந்த நிலை மாறும்'' என்றார். பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai