சுடச்சுட

  

  தலாய் லாமா விவகாரத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

  By DIN  |   Published on : 07th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Dalai

  அருணாசலப் பிரதேசத்துக்கு திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா செல்லும்பட்சத்தில், இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், திபெத்திய மதகுருவான தலாய் லாமாவை அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தருமாறு அந்த மாநில புத்த பிட்சுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்பேரில், தலாய் லாமா அங்கு செல்வதற்கு மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியது. இதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்தது. இது, இரு நாடுகளிடையே பிரச்னையை உருவாக்கும் எனவும் சீன அரசு அப்போது எச்சரித்திருந்தது.
  சீன எச்சரிக்கை புறக்கணிப்பு: சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா வருவதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் வருகை தருவார் என்றும், அவரை பொதுமேடையில் இந்தியத் தலைவர்கள் சந்திப்பர் என்றும் இந்தியா அண்மையில் அறிவித்தது. இது, சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கடும் விளைவுகள் - சீனா எச்சரிக்கை: இந்நிலையில், தலாய் லாமா விவகாரத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான ’குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் திங்கள்கிழமை வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
  சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசம் செல்வதற்கு தலாய் லாமாவுக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. தலாய் லாமா ஆபத்தானவர் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை. அதேசமயத்தில், தலாய் லாமாவின் பயணம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் இந்தியா உணரவில்லை.
  தலாய் லாமா புத்த மதத் தலைவர் அல்ல; அவர் ஒரு திபெத்திய பிரிவினைவாதி. அவரை அருணாசலப் பிரதேசத்துக்குள் அனுமதிப்பது சீனா - இந்தியா இடையே மோதலை உருவாக்கும். இது, இரு நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்தையே பாதிக்கும்.
  தலாய் லாமாவைப் பயன்படுத்தி தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறிவிடலாம் என இந்தியா நம்புகிறது. ஆனால், அது ஒருபோதும் சாத்தியமல்ல.
  இந்தியா - சீனா இடையே நீண்டகாலத்துக்குப் பிறகு தற்போது நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன.
  வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளாக விளங்கும் இந்த இரு நாடுகளும் எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்குப் பயணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai