சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கு: உ.பி. அமைச்சர் பிரஜாபதியின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 07th March 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Prajapati

    பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு மீது வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரப் பிரதேச காவல்துறைக்கு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி அந்த மாநில அமைச்சர் காயத்ரி பிரஜாபதி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பிரஜாபதிக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். அதில் அவர், பிரஜாபதியும், அவரது கூட்டாளிகளும் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். தனது மகளையும் தற்போது அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
    இதையடுத்து பிரஜாபதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
    இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலின்போது வாக்களித்த பிரஜாபதி திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அவருக்கு எதிராக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரஜாபதி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு எதிராக கடந்த 17-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
    இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    இதுதொடர்பான வழக்கில் பிரஜாபதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யுமாறு மட்டுமே காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கவில்லை.
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தற்போது அரசியல் சாயம் பூசப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
    இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தட்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
    மேலும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி பிரஜாபதிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
    பிரஜாபதியின் கூட்டாளி கைது: இதனிடையே, அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் கூட்டாளியும், பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்தவருமான சந்திரபால் சிங்கை லக்னௌ போலீஸார் கைது செய்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai