Enable Javscript for better performance
மல்லையா சொத்துகளை ஏலத்தில் விடும் முயற்சி மீண்டும் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    மல்லையா சொத்துகளை ஏலத்தில் விடும் முயற்சி மீண்டும் தோல்வி

    By DIN  |   Published on : 07th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mallya

    கடன் ஏய்ப்பு விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் இருவேறு சொத்துகளை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது.
    அந்தச் சொத்துகளின் அடிப்படை விலையை 10 சதவீதம் குறைத்தபோதிலும், அவற்றை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவற்றை விற்பனை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வங்கிகள் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன. பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் ஏய்ப்பு செய்த மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அவரது ’கிங் ஃபிஷர்' நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை ஏலத்தில் விற்று, அதன் மூலம் கடன் தொகையை ஈடு கட்ட வங்கிகள் முடிவு செய்தன.
    அதன்படி, மும்பையில் உள்ள ’கிங் ஃபிஷர்' இல்லம், கோவாவில் உள்ள சொகுசு பங்களா ஆகியவற்றை ஏலத்துக்கு விடத் திட்டமிடப்பட்டது.
    சுமார் 17,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மும்பை இல்லத்தின் அடிப்படை விலை ரூ.150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகைக்கு ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் மூன்று முறை ஏல முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதேபோன்று கோவாவில் உள்ள பங்களாவும் இருமுறை ஏலத்துக்கு வந்தது. அதனையும் ஏலம் கோர எவரும் முன்வரவில்லை.
    இந்நிலையில், அந்த இரு சொத்துகளின் அடிப்படை விலை மேலும் 10 சதவீதம் குறைக்கப்பட்டு திங்கள்கிழமை ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும்பை இல்லத்துக்கு ரூ.103.5 கோடியும், கோவா பங்களாவுக்கு ரூ.73 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இம்முறை ஏலம் கோர சிலர் வரலாம் என வங்கிகள் காத்திருந்த நிலையில், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவர்கூட அந்தச் சொத்துகளை வாங்க முன்வரவில்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இதனால் அவற்றை விற்க மேற்கொண்ட முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai