Enable Javscript for better performance
உ.பி. அமைச்சர் ஆஸம் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி. அமைச்சர் ஆஸம் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

    By DIN  |   Published on : 08th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச குடிநீர் வாரிய முறைகேடு வழக்கில், அந்த மாநில அமைச்சர் ஆஸம் கான் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் காலந்தாழ்த்தி வருவது ஏன்? என்றும் ஆஸம் கானுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
    உத்தரப் பிரதேச குடிநீர் வாரிய நிதி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வாரியத்துக்கு தலைவராக உள்ள ஆஸம் கானுக்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
    இந்நிலையில், இதுகுறித்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆஸம் கானிடம் இரு முறை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகததால், ஆஸம் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடி ஆணையை அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.
    இதை எதிர்த்து ஆஸம் கான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெüல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது ஆஸம் கான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், "உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், மார்ச் 11-ஆம் தேதிக்குப் பிறகு மனுதாரர் ஆஜராக அனுமதியளிக்க வேண்டும்' என்றனர்.
    இதைக் கேட்டு சினமடைந்த நீதிபதிகள், "நீதிமன்றம் கூறும் தேதியில்தான் ஆஜராக வேண்டும்' என்றனர். மேலும், "ஆஸம் கானின் தொகுதியில் தேர்தல் முடிந்துவிட்டது; அதனால் அவருக்கு வாக்களிக்கும் கடமை எதுவும் இல்லை; எனவே, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஸம் கான் புதன்கிழமை (மார்ச் 8) கட்டாயம் ஆஜராக வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai