சுடச்சுட

    

    மணிப்பூரில் இன்று இறுதிக் கட்டத் தேர்தல்: அக்னிப் பரீட்சையில் முக்கியத் தலைவர்கள்

    By DIN  |   Published on : 08th March 2017 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணிப்பூர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவில்தான் முக்கியத் தலைவர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    இந்த வாக்குப் பதிவு நடைபெறும் 22 தொகுதிகளில், முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்குடன் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா நேரடியாகப் போட்டியிடும் தெளபால் தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
    38 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட வாக்குப் பதிவின்போது 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்திருந்த நிலையில், தற்போது நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தொபால் பள்ளத்தாக்கு மாவட்டதிலும், உக்ருல், சாண்டெல், தமேங்லாங், சேனாபதி ஆகிய மலைப் பகுதி மாவட்டங்களிலும் இந்த 22 தொகுதிகள் அமைந்துள்ளன.
    பலத்த பாதுகாப்புக்கிடையே காலை 7 மணி முதல் 1,151 வாக்குச் சாவடிகளில் இந்த இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய, மத்திய பாதுகாப்புப் படையின் 280 படைப் பிரிவுகளை தொகுதிகள் முழுவதும் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
    இந்த இறுதிக் கட்ட வாக்குப் பதிவில், முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் போட்டியிடும் தெளபால் தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    இந்தத் தொகுதியில், அவரை எதிர்த்து சமூகப் போராளி இரோம் ஷர்மிளா நேரடியாகக் களமிறங்கியுள்ளதே இதற்குக் காரணம்.
    ஆயதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள இரோம் ஷர்மிளா, ஒக்ராம் இபோபி சிங்குக்கும் பலத்த போட்டியைத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    எனவே, முதல்வருக்கு இந்தத் தேர்தல் ஒரு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    அவரைப் போலவே, துணை முதல்வர் கைகாங்காமுக்கும் இது ஒரு முக்கியத் தேர்தலாக அமையும் என்று கூறப்படுகிறது.
    மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸýக்கு, பாஜக கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் வளர்ச்சியின்மை, ஊழல், நிதிமுறைகேடுகள், சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைத் துருப்புச் சீட்டாக பாஜக பயன்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது. முக்கியமாக, கடந்த 3 மாதங்களாக ஐக்கிய நாகா கவுன்சில் மேற்கொண்டுள்ள பொருளாதார முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதில் காங்கிரஸ் அரசின் இயலாமையைச் சுட்டிக் காட்டி பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகள், அரசின் சாதனைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
    இந்தச் சூழலில், முக்கியத் தலைவர்கள் மட்டுமல்லாது, முக்கியக் கட்சிகளின் எதிர்காலமும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இறுதிக் கட்ட வாக்குப் பதிவில்தான் நிர்ணயிக்கப்படும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai