சுடச்சுட

  

  மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவில் 4,000 புதிய இடங்கள்: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 08th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi1

  குஜராத் மாநிலம், சூரத் நகர விமான நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை மாலை அணிவித்து வரவேற்ற அந்த மாநில பாஜகவினர்.

  நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவில் 4,000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
  குஜராத் மாநிலத்தில் 2 நாள்கள் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சூரத் நகருக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வந்தார்.
  அப்போது, அந்நகர விமான நிலையத்துக்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குழுமியிருந்த மருத்துவ மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் மோடி பேசியதாவது: நமது தேசத்தில் மருத்துவத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக எப்போதும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு காரணம் அதிக மருத்துவர்களை உருவாக்க நம்மிடம் மிகப் பெரிய அமைப்பு இல்லை.
  இதுதவிர மேலும் சில முக்கியப் பிரச்னை உள்ளது. அதாவது, மருத்துவப் படிப்புக்கான முதுநிலைப் பிரிவில் போதிய இடங்கள் இல்லாததும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவில் இடப் பற்றாக்குறை இருப்பதால் மருத்துவப் படிப்பை பயிற்றுவிக்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவே சிக்கலுக்கு காரணமாகும்.
  குறைவான பேராசிரியர்கள் இருப்பதால் புதிய மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்க முடியாது. எனவே, கடந்த ஆண்டில் மட்டும் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவில் 4,000 புதிய
  இடங்கள் அதிகரிக்கப்பட்டன.
  இதன்காரணமாக, இனி ஒவ்வோர் ஆண்டும் மேலும் 4,000 முதுநிலை படிப்பு முடித்த மாணவர்கள் வெளி வருவார்கள். அவர்களில் பலர் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகி பல நூறு மருத்துவர்களை உருவாக்குவார்கள். இதன்மூலம், மருத்துவர்கள் பற்றாக்குறை குறையும். மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவ சேவைகள் சென்றடையும்.
  நாடு முழுவதும் கழிப்பறை வசதி இல்லாத நகரம் மற்றும் கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளைப் பாராட்டுகிறேன். இதுவரை நாடு முழுவதும் உள்ள 500 நகரங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நகரமாக மாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
  இந்தப் பயணத்தின்போது குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்கும் பிரதமர் சென்று வழிபாடு நடத்த உள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai