Enable Javscript for better performance
மாநிலங்களவை அலுவலை ஒத்திவைக்க வலியுறுத்தி மைத்ரேயன் எம்.பி. நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

  

  மாநிலங்களவை அலுவலை ஒத்திவைக்க வலியுறுத்தி மைத்ரேயன் எம்.பி. நோட்டீஸ்

  By DIN  |   Published on : 08th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mythreyan

  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அலுவலை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வலியுறுத்தும் நோட்டீûஸ மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் செவ்வாய்க்கிழமை அளித்துள்ளார்.
  அதில், "மாநிலங்களவை அலுவலை 267-ஆவது விதியின்படி வியாழக்கிழமை (மார்ச் 9) ஒத்திவைத்து விட்டு, மக்கள் மனங்களில் சந்தேகமாகவுள்ள முறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விவாதிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற ஒத்திவைப்பு நோட்டீஸ்கள் மாநிலங்களவை அல்லது மக்களவையில் அளிக்கப்பட்டால், அவற்றைப் பரிசீலித்து பிரச்னையின் தீவிரம் அடிப்படையில் ஏற்பதா வேண்டாமா என்று இரு அவைகளின் தலைவர்கள் முடிவு செய்வர். அந்த வகையில் மைத்ரேயன் அளித்துள்ள நோட்டீஸ் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று மாநிலங்களவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் ஹாஜி அப்துல் சலாம் (69) கடந்த மாதம் 28-ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
  இதையடுத்து, வியாழக்கிழமை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கும் முதல் நாளில், அப்துல் சலாமின் மறைவுக்கு உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது. அதன் பிறகு முதல் நாளுக்குரிய கேள்வி நேர அலுவல் நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.
  அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் நீக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் டாக்டர் மைத்ரேயன், ஆர்.லக்ஷ்மணன், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்), அசோக் குமார் (கிருஷ்ணகிரி), ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி), செங்குட்டுவன் (வேலூர்), ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), எஸ்.ராஜேந்திரன் (விழுப்புரம்), சத்யபாமா (திருப்பூர்), வனரோஜா (திருவண்ணாமலை), ஆர்.பார்த்திபன் (தேனி), வி.ஏழுமலை (ஆரணி) ஆகியோர் உள்ளனர்.
  கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்றுச் செயல்படும் இவர்கள் மீது இன்னும் அதிமுக மேலிடம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  இதற்கிடையே, கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் தலைமையிலான ஒரு பிரிவு எம்.பி.க்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியையும் அவர்கள் சந்தித்து புகார் அளித்தனர்.
  இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநிலங்களவையில் மைத்ரேயனும் மக்களவையில் பி.ஆர்.சுந்தரமும் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, இதுநாள் வரை தனித்தனி களத்தில் நின்று கருத்து வேறுபாடுகளைப் பதிவு செய்து வந்த இரு பிரிவு எம்.பி.க்களும், நாடாளுமன்றத்துக்குள் உள்கட்சி விவகாரத்தை எழுப்புவதன் மூலம் நேரடியாக மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai