மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் சிறை
By DIN | Published on : 08th March 2017 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேருக்கு மகாராஷ்டிர அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
மேலும் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்து பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டதாக ஹேம் மிஸ்ரா என்பவரை மகாராஷ்டிர போலீஸார் கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டதாக தில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபா, பிரசாந்த் ரஹி, மகேஷ் திர்கே, பாண்டு நரோத், விஜய் திர்கே ஆகிய மேலும் 5 பேரை போலீஸார் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த 6 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மகாராஷ்டிர கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு, நீதிபதி சூர்யகாந்த் ஷிண்டே முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் திர்கேக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.