சுடச்சுட

  

  மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட அதிமுக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 08th March 2017 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  THAMBIDURAI

  இலங்கை கடற்படையால் நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
  இதுதொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்துக்கு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலையில் சென்று மனு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஊரில் இல்லாததால் அவரது அறிவுறுத்தலின் பேரில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவிடம் இந்த மனு அளிக்கப்பட்டது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:
  இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டுள்ளார். பல மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
  இதன் தொடர்ச்சியாக பிரதமரிடம் அதிமுக சார்பில் அளித்துள்ள கடிதத்தில், "இந்திய - இலங்கை சர்வதேச கடல் பகுதி அருகே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய இந்திய மீனவர்களின் உரிமையை மீட்டுத் தர வேண்டும். இந்திய - இலங்கை அதிகாரிகள், மீனவர்கள், அமைச்சர்கள் நிலையிலான சந்திப்பில் இரு தரப்பிலும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு பிரயோகம் இருக்காது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில், அதை மீறும் வகையில் இலங்கை கடற்படை செயல்பட்டுள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களின் மீன்பிடிக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ் மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படை கட்டவிழ்த்து விடும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளோம்.
  பிரதமரின் முதன்மைச் செயலாளரை சந்திக்கும் போது, ஏற்கெனவே வரவழைக்கப்பட்டிருந்த வெளியுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் மத்திய அரசு தகவல்களைப் பெற்று வருவதைப் பார்க்க முடிந்தது. இந்த விஷயத்தில் இலங்கை அரசை பிரதமரும் மத்திய அரசும் தொடர்பு கொண்டு, அந்நாட்டு கடற்படையின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் என்றார் தம்பிதுரை.
  இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் மைத்ரேயன் அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீஸ் குறித்து கேட்டதற்கு, "ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக ஒன்றாகவே உள்ளது. சசிகலா வழியில் ஒன்றாகச் செயல்படுவோம். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதா தலைமையில் தொடங்கிய ஆட்சியின் மீதமுள்ள காலத்தை காப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கடமையாகும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக வெற்றி பெறும். மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட போதும், உயிரிழந்த போதும் பன்னீர்செல்வம் மருத்துவமனையில்தான் இருந்தார். திடீரென அவர் ஏன் தடம் மாறினார் என்பது குறித்து அவர்தான் பதில் அளிக்க வேண்டும் என்றார் தம்பிதுரை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai