சுடச்சுட

    

    ராணுவத்தில் மோசமாக நடத்தப்படுகிறோம்: மேலும் ஒரு படைவீரர் புகார்

    By DIN  |   Published on : 08th March 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவத்தில் உயரதிகாரிகளால் தாங்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், தங்களுக்கான உணவு உள்ளிட்டவற்றின் தரம் நன்றாக இல்லை என்றும் மீண்டும் ஒரு படைவீரர் புகார் எழுப்பியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ராணுவம் மறுத்துள்ளது.
    எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து குறைகூறியிருந்தார். இதேபோல் துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் பல்வேறு வீரர்களும் தங்களது குறைகளை வெளியிட்டதோடு, உயரதிகாரிகள் தங்களைத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அதன் தொடர்ச்சியாக, ராய் மேத்யூ என்ற வீரர், ராணுவத்தில் நிலவும் குறைகளைப் பற்றியும் அதிகாரிகளின் இல்லங்களில் வீரர்கள் வேலைக்காரர்கள் போல் நடத்தப்படுவதாகவும் கூறும் விடியோ காட்சி கடந்த வாரம் செய்தி இணையதளம் ஒன்றில் வெளியானது. அதன் பின் அந்த வீரர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இறந்து கிடந்தார்.
    இந்நிலையில், ராணுவத்தில் படைவீரராகப் பணியாற்றும் குஜராத்தைச் சேர்ந்த சிந்தாவ் ஜோகிதாஸ் லக்குபாய் என்பவர் விடியோ காட்சி ஒன்றை சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில், ராணுவ வீரர்களின் இல்லங்களில் தாமும், மற்ற படைவீரர்களும் வேலைக்காரர்களைப் போல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தங்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    ராணுவ வீரர்களின் நலவாழ்வுக்காக மிகப்பெரிய அளவில் பணம் ஒதுக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன என்றும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோரைத் தாம் அணுகியபோதிலும் யாரும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றும் அந்த விடியோவில் லக்குபாய் தெரிவித்துள்ளார்.
    எனினும், அவரது குற்றச்சாட்டுகளை ராணுவம் மறுத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ராணிகேத் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லக்குபாய் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாகவும், அவர் இதுவரை எந்த அதிகாரியின் இல்லத்திலும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், லக்குபாய் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவை அனைத்தும் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai