சுடச்சுட

    

    18 மாதங்கள் கடந்த பின்பும் பிரதமர் அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடி பிகாருக்கு வரவில்லை

    By DIN  |   Published on : 08th March 2017 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து 18 மாதங்கள் கழிந்த பிறகும் அந்தத் தொகையானது அந்த மாநிலத்துக்கு வந்து சேரவில்லை என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
    பிகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலை முன்னிட்டு, பாஜகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, "பிகாருக்கு ரூ.1,25,003 கோடி சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்தார்.
    இந்நிலையில், பிரதமரின் வாக்குறுதிப்படி பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதி பற்றிய விவரங்களை அளிக்குமாறு கோரி மும்பையைச் சேர்ந்த தகவல் ஆர்வலர் அனில் கல்கலி என்பவர், மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த ஆண்டு (2016) டிசம்பரில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    அதற்கு மத்திய நிதியமைச்சகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றும் ஆனந்த் பார்மர் அளித்துள்ள பதிலில், "தற்போது வரை ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை என்றபோதிலும் திட்டங்களும், பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அனில் கல்கலி, மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகிப்பவர் பிகாருக்கு அளித்த வாக்குறுதிகள், ஒன்றரை ஆண்டுகளான பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்பது அவமானகரமானது. ஏழு கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசத்துக்கும் பாஜக அண்மையில் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜகவால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் மிகப்பெரிய வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன.
    ஆனால், அவை எந்த அளவுக்குத் தவறானவை என்பதை சம்பந்தப்பட்ட கட்சி ஆளும் அரசு அளிக்கும் தகவல்களே காட்டுகின்றன. எனவே, அந்த வாக்குறுதிகளை எப்படி தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியும்?
    இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி கடந்த 2015, நவம்பர் 7ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "மாநிலத்துக்கு ரூ.80,068 கோடி நிதியுதவி அளிக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. அதேபோல், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சுற்றுலா மேம்பாட்டுக்கு என்று ரூ.43,589 கோடி நிதியுதவி செய்வதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் ஆர்டிஐ மனு மூலம் தெரியவந்துள்ளது என்றார் கல்கலி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai